Skip to main content

பிரபலமாகும் செக்கு எண்ணெய்! - ‘செக்’ வைத்த உணவுப்பாதுகாப்புத் துறை!

Published on 13/02/2018 | Edited on 20/02/2019

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இடம்பெறும் மூலப்பொருட்களுள் முக்கிய இடம் வகிப்பது எண்ணெய். இந்த எண்ணெயிலேயே விதவிதமான வகைகள் உண்டு. அந்த எல்லா வகைகளையும் ஏதோவொரு வகையில் நாம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இது போதாதென்று ரீஃபைண்ட் ஆயில், எக்ஸ்ட்ரா அல்லது மைக்ரோ ரீஃபைண்ட் ஆயில், சாச்சுரேட்டட் ஃபேட் ஃப்ரீ ஆயில் என பல்வேறு பெயர்களில் எண்ணெய்களைத் தயாரித்து விளம்பரப்படுத்தி நுகர்வோரைக் குழப்புகின்றன நிறுவனங்கள்.

 

light

 

இந்த நிலையில்தான், நாம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் குறித்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது உணவுப்பாதுகாப்புத் துறையின் ஆய்வு. நாம் பயன்படுத்துவது நல்ல எண்ணெயா, நல்லெண்ணெயா என்ற குழப்பதை சரிசெய்யும் முயற்சியிலும் அது ஈடுபட்டுள்ளது. இதன்படி, சேலம், திருப்பூர், நாமக்கல் போன்ற தமிழ்நாட்டின் மேற்குமாவட்டங்களில் உள்ள 930 எண்ணெய் மாதிரிகளை சோதனைக்கு எடுத்து, அதில் 277 மாதிரிகள் உண்ணத்தகாத விளக்கு எண்ணெய், உணவுக்காக விற்கப்படுவதை உறுதி செய்துள்ளது உணவுப் பாதுகாப்புத் துறை. இதற்கு உண்ணத் தகுந்த, தகாத எண்ணெய் வகைகள் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு, விற்கப்படுவது உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

எனவே, உணவுப் பாதுகாப்புத் துறை இந்த விதிமீறல்களைக் கலைய பல்வேறு வழிமுறைகளை விற்பனையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, உண்ணத் தகுந்த எண்ணெய்களில் எந்தவிதமான நுகர்வோர்க் கவர்ச்சிப் பெயர்கள் இடம்பெறக் கூடாது. விளக்கு எண்ணெய்ப் பாக்கெட்டுகள் அல்லது பாட்டில்களில் 30% அளவிற்கு விளக்குப்படம் இடம்பெற்றிருக்க வேண்டும். உண்ணத்தகுந்த, தகாத எண்ணெய்களை ஒரே அலமாரியில் வைத்து விற்கக்கூடாது. எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நோயற்றவர்களாக இருக்கவேண்டும். 

 

chekkku

 

இதுமட்டுமின்றி, தற்போது செக்கு எண்ணெய் வியாபாரம் சந்தையில் சூடுபறக்கிறது. சுகாதாரமானது, இயற்கையானது, மருத்துவ குணம் நிறைந்தது உள்ளிட்ட பல காரணங்களால் பிரபலமாகி இருக்கும் செக்கு எண்ணெய் மீதும் இந்த சந்தேகத்தை உணவுப் பாதுகாப்புத் துறை எழுப்பியுள்ளது. பெரும்பாலான இடங்களில் மக்கள் தாங்களே மூலப்பொருட்களைக் கொடுத்து எண்ணெய் ஆட்டக் கொடுக்கின்றனர். இருந்தாலும், அதில் உள்ள நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை உணவுப் பாதுகாப்புத்துறை முன்வைத்துள்ளது.

 

அரசு அமைப்புகள் சுகாதாரம் சார்ந்த விடயங்களில் காட்டும் அக்கறையை, நுகர்வோரும் பின்பற்றும் போதுதான் இதுபோன்ற ஐயங்களுக்கு இடமில்லாமல் போகும்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஜவ்வரிசி தொழிற்சாலையில் சிக்கிய கெமிக்கல்கள்; உணவுப் பாதுகாப்புத்துறை அதிர்ச்சி

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Chemicals trapped in sorghum factory; Food safety shock

உணவுப் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், சேலத்தில் ஜவ்வரிசி ஆலையிலேயே கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் ஜவ்வரிசி தொழிற்சாலை சீல் வைக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.

சேலம் தலைவாசல் அருகே உள்ள சித்தேரி பகுதியில் அமைந்துள்ளது. நியூ பாரத வேல் சேகா ஃபேக்டரி. அந்த ஆலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 'நான் ஃபுட் கிரேட்' ரகத்தைச் சேர்ந்த சோடியம் ஹைபோ குளோரைடு கெமிக்கல் மூன்று கேன்களில் இருந்தது தெரிய வந்தது, உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு ஜவ்வரிசி தயாரித்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சேகோ 13,200 கிலோ, ஸ்டார்ச் மில்க் 27 ஆயிரம் கிலோ, ஈர ஸ்டார்ச் மாவு 7500 கிலோ, மக்காச்சோளம் 40 கிலோ, ஹைப்போ கெமிக்கல் 12 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு மொத்தமாக 19 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு தயாரிக்கப்பட்ட மாதிரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு உணவுப் பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த ஆலையின் உரிமையாளருக்கு இது தொடர்பாக நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story

‘பஞ்சு மிட்டாய் பிரியர்களின் கவனத்திற்கு’- உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Food Safety Department Warning on Cotton Candy Lovers

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து கடந்த வாரம் பறிமுதல் செய்திருந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்தார்.

அதே சமயம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தி தரமில்லாத மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருந்தனர்.

இந்நிலையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பிங்க், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ‘ரோடமைன் பி’ உள்ளிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்துள்ளது.