Skip to main content

குரங்குகளுக்கு உணவு வழங்கிய ஓ.பி.எஸ். மகன்! 

Published on 14/05/2020 | Edited on 14/05/2020


கரோனா வைரஸ் மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறவர்கள். அவ்வபோது அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வந்து போகிறார்கள். இருந்தாலும் வேலை இல்லாததால் பொதுமக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள். அதுபோல வனவிலங்குகளும் கூட சரி வர உணவு கிடைக்காமல் இருந்து வருகிறது.


அதுபோல்தான் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுலா தளமாக இருந்து வருவதால் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து போவது வழக்கம். இப்படி வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் பலர் மலையில் ரோட்டு ஓரங்களில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு உணவு, பழங்கள், காய்கணிகள் மற்றும் பிஸ்கட்டுகளை போட்டு விட்டு போவார்கள். அந்த உணவுகளைதான் குரங்குகள் உண்டு வாழ்ந்து வந்தன.

 

 


தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவதில்லை இதனால் மலையில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு உணவு கிடைக்காமல் பரிதவித்து வந்தன. இந்த விஷயம் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் இளைய மகனான ஜெயபிரதீப்பின் காதுக்கு எட்டவே உடனே வாழைப்பழம், தர்பூசணி, கேரட், ஆப்பிள், கொய்யா உள்பட சில பழங்களையும், காய்கறிகளையும் பல ஆயிரங்களுக்கு வாங்கி தனது ஆதரவாளர்கள் மூலம் மலையில் சுற்றித் திரியும் குரங்குகளுக்கு வழங்க சொல்லியுள்ளார்.

 


அதன் அடிப்படையில் ஜெயபிரதீப் ஆதரவாளர்கள், உடனே ஒரு லாரியை வாடகைக்கு பிடித்து பழங்கள். காய்கனிகளையும் ஏற்றி கொடைக்கானல் மலைப் பகுதியான காட் ரோடு, ஊத்து, பெருமாள் மலை உள்பட சில பகுதிகளில் உள்ள ரோட்டு திட்டுகளில் வைத்தனர். அதை கண்டு அங்கு பசியால் சுற்றி திரிந்து கொண்டிருந்த குரங்குகள் தாவி தாவி வந்து அந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு சென்றன. பசியால் வாடிய குரங்குகளுக்கு உணவுகளை வழங்கியது கண்டு அப்பகுதிகளில் உள்ள  மலைவாழ் மக்கள் பாராட்டியுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story

மீண்டும் அரங்கேறிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சம்பவம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
young man trapped in a 100-foot ditch in Kodaikanal in the style of the film 'Manjummel Boys'

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள மலை பிரதேச பகுதிகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதி அதிக குளிராக இருப்பதால், கோடை காலத்தில் அதிகமான நபர்கள் சுற்றுலா செல்வது வழக்கம். ஆனால் சமீபத்தில் குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளான, கேரளாவைச் சேர்ந்த சில இளைஞர்கள், ஆபத்து நிறைந்த குணா குகைக்கு தடையை மீறி செல்கின்றனர்.

அப்போது, அங்குள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து விடும் ஒருவரை, அவரின் சக நண்பர்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுவதுதான் கதை. இந்தப் படம் வெளியானது முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல், இந்தத் திரைப்படம் வெளியானதில் இருந்து, கொடைக்கானலுக்கும் குணா குகைக்கும் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து 3 நாட்கள் கிடைத்த விடுமுறை தினத்தில் தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல நண்பர்கள் குழு ஒன்று திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 22 வயதான தனராஜ் மற்றும் அவரின் நண்பர்கள் தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள், வழக்கமாக சுற்றுலா செல்லும் இளைஞர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அது அனைத்தையும் செய்து மகிழ்ந்துள்ளனர். அப்போது அவரவர் புகைப்படங்களை வித விதமாக எடுத்து மகிழ்ந்துள்ளனர். பின்னர், கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதிக்குச் சென்ற நண்பர்கள், அங்கிருந்து நடந்து சென்று டால்பின் நோஸ் சுற்றுலாப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

young man trapped in a 100-foot ditch in Kodaikanal in the style of the film 'Manjummel Boys'

இந்தப் பகுதி கொடைக்கானலில் உள்ள ஆபத்தான இடங்களுள் இதுவும் ஒன்று. டால்பின் மீனின் மூக்குப்பகுதி போன்று இந்தப் பாறை அமைந்துள்ளதால் இந்த இடம் இவ்வாறு பெயர் பெற்றுள்ளது. ஆனால் இங்குள்ள ஆபத்தை உணராத தனராஜ் செல்ஃபி எடுக்கும் நோக்கத்துடன், டால்பின் நோஸ் பாறை பகுதியின் முனைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரின் கால் சட்டென்று வழுக்கியுள்ளது. உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் மேலே இருந்து அலறியபடி பொத்தென்று சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார் தனராஜ். இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவரின் நண்பர்கள், அந்த ஆபத்தான இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

கை கால்களில் பலத்த காயங்களுடன் தனராஜ் கீழிருந்து கதறியுள்ளார்.உடனே அவரின் நண்பர்கள் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர், வனத்துறையினர் என அனைவரும் உடனடியாக சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து கயிறு கட்டி 100 அடி பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் தனராஜை உயிருடன் மீட்டுள்ளனர். கீழே விழுந்த தனராஜிக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

young man trapped in a 100-foot ditch in Kodaikanal in the style of the film 'Manjummel Boys'

இதன் காரணமாக படுகாயமடைந்த தனராஜை உயிருடன் தீயணைப்பு துறையினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறும் போது, கொடைக்கானல் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடிய பகுதி மட்டுமில்லை. இது ஆபத்து நிறைந்த பகுதியுமாகவும் இருக்கிறது. அழகும் ஆபத்தும் உள்ளதை, சிலர் அறியாது ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல ஆசைப்படுகின்றனர். வனத்துறை சார்பாக ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட போதிலும், சிலர், எச்சரிக்கையையும் மீறி செல்வதால் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது. எனவே இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆபத்தை உணர்ந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.