flood relief; Chennai Corporation is the main recommendation to Tamil Nadu Government

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது.

Advertisment

அதில், “சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 3 வட்டங்களில் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன்கள் வழங்கப்படும்” என அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்து 852 குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணத்துடன் கூடுதல் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், எண்ணெய்க் கசிவுக்கு காரணமான சிபிசிஎல் நிறுவனத்திடம் இதற்கான தொகையைப் பெற்று, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.