Skip to main content

சாலையில் தேங்கிய தண்ணீரில் மீன்பிடித்து, நாற்று நட்டு போராட்டம்; அமைச்சர் தொகுதியின் அவலம்!

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

 

 

அமைச்சர் காமராஜின் தொகுதியில் உள்ள பூந்தோட்டம் கிராமத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, தெருவில் தேங்கியிருந்த தண்ணீரில் மீன் பிடித்தும், நாற்று நடவு செய்தும், பாடை கட்டி தூக்கிச் சென்றும் நூதனமான முறையில் பொதுமக்கள் போராட்டம் செய்துவருகின்றனர் .

 

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பூந்தோட்டம் புதுத்தெரு கிராமத்தில், சுமார் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அப்பகுதி மக்கள் 20 வருடங்களுக்கு மேலாக தரமான சாலை வசதி செய்துதர வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். லேசாக மழை பெய்தாலே சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி குளம்போல் தண்ணீர் தேங்கிவிடும் நிலையே இருந்துவருகிறது.

 

இது குறித்து வலங்கைமான் வட்டாட்சியர், வட்டார ஊராட்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் என அதிகாரிகள் பலரிடமும் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.

 

இந்தச் சூழலில் இன்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சாலையை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி சாலையில் நாற்று நட்டும், தெருவில் தேங்கியுள்ள தண்ணீரில் மீன்பிடித்தும், பாடை கட்டி தோளில் சுமந்து தண்ணீரில் கடந்து சென்றும் நூதனமுறையில் போராட்டம் செய்தனர்.

 

ஊர்வலமாகச் சென்ற மக்கள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அதோடு கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கொட்டும் மழையிலும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

''இதற்கு மேலும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வரும் தேர்தலில் அமைச்சர் காமராஜுக்கு எதிராகப் போராட்டம் செய்து சரியான பாடம் புகட்டுவோம்" என்கிறார்கள் வாலிபர் சங்கத்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
madurai youth karthi incident Relatives involved in the road block

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 3 ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 4 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

madurai youth karthi incident Relatives involved in the road block

இந்நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இன்று (07.04.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.