
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கமான லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகம், வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே இலட்சத்தீவுகள் வரை உள்ள நீர் நிலைகளில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் பணியாற்றுபவர்கள் தமிழகத்தின் கடலோர மீன் இறங்கு தளங்களில் கள ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே முடசல் ஓடை மீன் பிடி இறங்கு தளத்தில் மீனவர்கள் உணவுக்கு தேவைப்படாத மீன் எனக் கருதி மீன் ஒன்றை குப்பைத் தொட்டியில் வீசி இருந்தனர். அப்போது கள ஆய்வில் இருந்த ஆராய்ச்சி கழகத்தினர் அந்த மீனை எடுத்துச்சென்று அதனை தகுந்த முறையில் பதப்படுத்தி ஆய்வகத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் மரபணு சோதனையில் ஈடுபடுத்தினார்கள்.
அப்போது அது புதிய வகை விலாங்கு மீன் என்று கருதப்பட்டது. பிறகு, இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் முதுநிலை விஞ்ஞானியான, முனைவர். அனில் மொகபத்ராவுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு மேலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தியதில் அது புதிய விலாங்கு மீன் வகை தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து கண்டறியப்பட்டதின் காரணமாக, தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக விஞ்ஞானிகள் ‘ஜிம்நோதோராக்ஸ் தமிழ்நாடுயென்சிஸ்’ (Gymnothorax tamilnaduensis) எனப் பெயரிட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது உயிரியல் அமைப்பு மற்றும் பரிணாமம் (Zoosystematics and Evolution) என்னும் சர்வதேச இதழில் பல்வேறு திருத்தங்கள் மற்றும் மதிப்பாய்வுக்குப் பிறகு பதிவிடப்பட்டுள்ளது என்று கொச்சினில் உள்ள தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகத்தின் பிராந்திய அலுவலக முதுநிலை விஞ்ஞானி முனைவர் அஜித்குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “தற்போது இந்த வகை மீன்கள் தீவனத்துக்காகப் பயன்படுகிறது. இந்த மீனில் உள்ள புரோட்டின் அளவு குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மீன்களில் உள்ள புரோட்டின் அளவு இந்த மீனிலும் இருந்தால் இது உணவில் பயன்படுத்த பரிந்துரை செய்யப்படும். இதுபோல இந்தியாவின் பல்லுயிரி பெருக்க வளங்களை கண்டறிந்து பட்டியலில் சேர்ப்பது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும்” என்றார்.