Skip to main content

பட்டாசுக் கடை வெடி விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

Firecracker shop incident toll rises to 17

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தக் கடையில் கடந்த 7 ஆம் தேதி மாலை 3 மணியளவில் விற்பனைக்காக வாங்கி வந்த பட்டாசுகளை வாகனத்தில் இருந்து இறக்கிய போது தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அருகிலிருந்த மதுபானக் கடை உள்ளிட்ட 3 கடைகளிலும் தீ மளமளவெனப் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் தீ விபத்தில் பலியான 14 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

 

இந்தச் சூழலில் வெடி விபத்தில் சிக்கி 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வாணியம்பாடி வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்த சிறுவன் தினேஷ் (வயது 17) என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த 11 ஆம் தேதி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து பட்டாசு கடை வெடி விபத்தில், சிக்கி படுகாயங்களுடன் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 25) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இந்த வெடி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாணியம்பாடியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 19) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இவ்விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 16 பேரும், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரும் என பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகரெட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு; அதிரடி சட்டம் நிறைவேற்றம்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Implementation of Action Act for New regulation of cigarette sales in karnataka

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், பேசிய முதல்வர் சித்தராமையா, “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என்று பேசியிருந்தார். இது தற்போது விவாத பொருளாக மாறி வருகிறது. 

அதே சமயம், கர்நாடகா மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களுக்கு தடை விதித்து, சிகரெட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு விதித்தும் கர்நாடகா சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாவை, நேற்று (21-02-24) கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதன் பின் அவர் பேசியதாவது, “கர்நாடகாவில் உள்ள கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் விற்பனை செய்ய அனுமதி இல்லை. இந்த உத்தரவை மீறினால் ரூ.100 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் நடமாடும் பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘ஹூக்கா’ பார்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். அதனை தொடர்ந்து, இந்த சட்டத்திருத்த மசோதா, கர்நாடகா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

Next Story

கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கர்நாடக அரசு; எம்.என்.சி நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Action order for MNC companies and Karnataka Government giving priority to Kannadas

சமீபத்தில் பெங்களூரில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், பெங்களூரில் உள்ள கன்னட மொழி இல்லாத பெயர்ப் பலகை கொண்ட வணிக நிறுவனங்களைக் குறிவைத்து கன்னட ஆதரவு அமைப்பினர் வன்முறை போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, வணிக நிறுவனங்களில் கன்னட மொழி உள்ள பெயர்ப் பலகையை வைக்க வேண்டும் என்ற அவசர சட்டத்தைக் கர்நாடகா அரசு கொண்டு வந்தது.

இதனிடையே, கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடம் தவிர பிறமொழி பேசுபவர்கள் தான், அதிகமாக வேலைக்கு எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், கர்நாடகா இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தில் எத்தனை கன்னடர்கள் பணிபுரிகிறார்கள் என்ற விவரத்தை அந்த நிறுவனங்களின் வரவேற்பு அறையில் காட்சி பலகையாக வைக்கும்படி கர்நாடகா அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கர்நாடக சட்டப்பேரவையில் பேசியதாவது, “கர்நாடகாவில் உள்ள நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளின் பெயர்ப் பலகைகளில் 60 சதவீதம் கட்டாயம் கன்னட மொழியில் எழுதி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக கர்நாடக அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கன்னட மொழி மற்றும் கன்னடர்களின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனைக் கண்காணிக்கும் வகையில், கர்நாடகா அரசு புதிய உத்தரவைக் கொண்டு வந்துள்ளது. அதில் கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் கன்னட ஊழியர்களின் எண்ணிக்கையை அந்தந்த நிறுவனங்கள் தங்கள் அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு இணங்கத் தவறினால், அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படும். கன்னடர்கள் மற்றும் கன்னட மொழியின் நலனுக்கு எதிராகச் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து ‘கன்னட காவல்’ என்ற செல்போன் செயலி மூலம் புகார் அளிக்கலாம்” என்று கூறினார்.