Skip to main content

'பூச்சு வேலை மோசமாக உள்ளது'- கே.பி.பார்க் குடியிருப்பின் தரம் குறித்து ஐஐடி ஆய்வறிக்கை!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

'Finishing work is bad' - IIT study on KP Park housing quality!

 

சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் கட்டிடத்தின் பூச்சு வேலை மோசமாக உள்ளதாக ஐஐடி அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பில் கட்டிடத்தின் சுவர்கள் மிக மோசமாக இருந்ததும், சிமெண்ட் பூச்சுகள் தொட்டவுடன் உதிர்வதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்காக தற்போதைய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஐஐடி குழுவிற்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு முன்பு 'கியூப்' நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் தேவையான அளவான 70 சதவீதத்திற்குக் குறைவாக சிமெண்ட் இருந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் தற்பொழுது ஐஐடி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது, அதில், 'பூச்சு வேலை மோசமாக உள்ளது. டைல்ஸ் கற்கள் சரியாகப் பொருத்தப்படாமல் இருக்கிறது. மோட்டார்கள், மீட்டர் போர்டுகள் மற்றும் மின்சார இணைப்பு சார்ந்த சாதனங்களிலும் குறைபாடு உள்ளது. டைல்ஸ் கற்கள் சரியாகப் பொருத்தப்படாததால் சுவர்கள் எளிதில் தண்ணீரை உறிஞ்சி விழுந்து விடலாம். சரியான கால இடைவெளியில் கட்டிடத்திற்குத் தேவையான பராமரிப்பு வேலைகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். கட்டடத்தை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றி அங்கு வசிக்கும் மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும்' என்ற பரிந்துரையையும் ஐஐடி குழு வழங்கி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுவர் இடிந்து விபத்து; 3 பேர் பலியான சோகம்!

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
construction of side wall incident in puducherry

புதுச்சேரி மரப்பாலம் அருகே உள்ள வசந்த நகரில் உள்ள வாய்க்காலை ஆழப்படுத்தி பக்கவாட்டு சுவர் எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாய்க்காலை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 12 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் வாய்க்காலின் அருகில் இருந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 8 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக கடந்த ஜனவரி 22 ஆம் தேதி புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் உள்ள உப்பனாறு கால்வாய் அருகே புதிய பேருந்து நிலையத்திற்கும், காமராஜர் சாலைக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்ற போது அதற்காக கால்வாயை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் ஓட்டுநர் சுரேஷ் என்பவர் புதிதாக கட்டி வந்த 3 மாடிக் கட்டடம் ஒன்று கால்வாயை ஆழப்படுத்தும் பணியால் விரிசல் ஏற்பட்டு சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து தரைமட்டமானது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.