Skip to main content

உயிருக்கு ஆபத்து; கனியாமூர் பள்ளி ஆசிரியை தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல்! 

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

 Filed a petition in the court on behalf of the Kanyamoor school teacher!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மர்ம மரணம் தொடர்பாக பெரும் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து சின்னசேலம் காவல் நிலைய போலீசார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும் செயலாளருமான சாந்தி, முதல்வர் சிவசங்கரன், கணித ஆசிரியை கிருத்திகா, வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா ஆகிய ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

 

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேற்படி வழக்கில் ஐவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தங்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்க கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட ஐந்து பேரும் கடந்த 28ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணையை 10ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அதன்படி நேற்று அவர்களது  ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

 

பள்ளி நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாணவர்களின் எதிர்காலம் கருதி ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பு அரசு வழக்கறிஞர் மாணவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை இன்னும் ஜிப்மர் மருத்துவக் குழுவினரிடம் இருந்து வரவில்லை. அது வந்த பிறகு தான் இவர்கள் மீது என்ன பிரிவில் புதிய வழக்கு போடுவது என்று இறுதி முடிவு செய்யப்படும். அதுவரை இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். 

 

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணித ஆசிரியை கிருத்திகாவின் தந்தை ஜெயராஜ் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் பள்ளி தாளாளர், செயலாளர் ஆகியவருடன் ஒரே சிறையில் எனது மகள் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், மகள் கிருத்திகாவிற்கு பள்ளி நிர்வாகிகளால் கொலை மிரட்டல் வருவதாகவும் மகளது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக, கிருத்திகாவை சேலம் சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் ஜெயராஜ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

 

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவின் மீதான விசாரணையை பிறகு மேற்கொள்வதாக தெரிவித்தார். வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது தந்தை மூலம் நீதிமன்றத்தின் மனுதாக்கல் செய்துள்ள சம்பவம் மாணவி மர்ம வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுத்தை நடமாட்டம்; தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Leopard movement; Holiday announcement for private school

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் நேற்று (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கோவையில் இருந்து தனிப்படை ஒன்று விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செம்மங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று (03.04.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.