Field survey to open saloon shops in Chennai! response in High Court!

Advertisment

சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகளைத் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, சலூன் கடைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், ஊரடங்கிற்கு முன்னதாக, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வந்த சுமார் 10 லட்சம் முடித்திருத்த தொழிலாளர்கள், கடந்த 2 மாதங்களாக எந்த வித வருவாயும் இல்லாததால், வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்ட, தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு முடித்திருத்த தொழிலாளருக்கும், தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். முடித்திருத்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினிச் சாவினால் பாதிக்கப்படும் முன் அனைத்து சலூன் கடைகளையும் உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே மே 23-ம் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, சென்னையைத் தவிர மற்ற இடங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னையில் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாகவும், சலூன் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், சென்னையில் கள நிலவரத்தை ஆய்வு செய்து, சலூன் கடைகளைத் திறப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

Advertisment

இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஜூன் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.