ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே அமைந்துள்ளது முத்துவிஜயபுரம் கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசு. இவரது மகன் ஆரோக்கிய பிரபாகர். இவருக்கும் தட்டான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த உமா என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு மரியஜெலினா, ஜெமிதெரசா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த குடும்பம் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு உமாவின் கணவர் ஆரோக்கிய பிரபாகரர் மற்றும் அவரது இளைய மகள் ஜெமிதெரசா என இருவரும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், இந்த நோயில் இருந்து மீள முடியாமல் யாரும் எதிர்பாராத சமயத்தில் ஆரோக்கிய பிரபாகரர் மற்றும் ஜெமிதெரசா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கிடையில், தனது கணவனையும் மகளையும் பறிகொடுத்த உமா தனது மூத்த மகள் மரியஜெலினாவுடன் மாமனார் ஜேசு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆரம்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்துவந்த இவர்களது குடும்பத்தில் காலப்போக்கில் சிறுசிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்தது. ஆரோக்கிய பிரபாகருக்கு சொந்தமான சொத்தை பாகம் பிரிப்பதில் மாமனார் ஜேசுவுக்கும் மருமகள் உமாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அப்போதெல்லாம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் என இவர்களுடைய சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். ஆனால், நாளுக்கு நாள் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு திடீரென உச்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி வீட்டில் இருந்த உமா மர்மமான முறையில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கீழத்தூவல் போலீசார் படுகாயமடைந்த உமாவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்தது மாமனார் ஜேசு தான் என மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், இந்த செய்தி முதுகுளத்தூர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த உமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பம் உமாவை பார்த்து கண்ணீர்விட்டு கதறி துடித்தனர். இதையடுத்து, உயிரிழந்த உமாவின் சகோதரர் தினேஷ் என்பவர் கீழத்தூவல் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் இதனை சந்தேகத்திற்குரிய மரண வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர்.
அதில், போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தன்று காலை 9 மணியளவில் உமா தனது குடும்பத்தாருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்குவந்த மாமனார் ஜேசு, "சொத்தாடி கேக்குற சொத்து. இன்னைக்கே உன்னோட கதையை முடிச்சிடுறேன்" எனச் சொல்லி படுத்துக்கொண்டிருந்த உமா மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயற்சித்திருக்கிறார். அந்த நேரத்தில், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உமா செல்போனில் பேசிக்கொண்டிருந்த தனது குடும்பத்தாரிடம், "ஐயோ.. யாராச்சும் வாங்களே. என்ன எரிச்சி கொல்ல பாக்குறாங்க" பதற்றத்துடன் கூறியிருக்கிறார்.
அனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத மாமனார் ஜேசு ஈவு இரக்கமின்றி உமாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, பெட்ரோல் ஊற்றி எரித்ததில் உமாவின் முகம் சரியாக எரியாததால்.. மீண்டும் மண்ணெண்ணெய் ஊற்றி உமாவின் முகத்தை சிதைத்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இதனை கொலை வழக்கமாக மாற்றி குற்றம்சாட்டப்பட்ட ஜேசுவை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாமனார் ஜேசு தான்தான் உமாவை கொலை செய்தேன் என்பதை ஒப்புக்கொண்டார். இதனிடையே, கொலையாளி ஜேசு அவரது மருமகள் உமாவை எப்படி பெட்ரோலை ஊற்றி கொலை செய்தார் என்பதை கீழத்தூவல் காவல் ஆய்வாளர் இளங்கோவன் முன்னிலையில் நடித்துக் காட்டினார்.
இந்நிலையில், ஜேசு மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது, சொத்து தகராறில் சொந்த மருமகளையே எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்.. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.