Farmers demand police to release farmers...

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ளது சித்தனம்பட்டு. வடக்கு தாங்கல். உட்பட புகலூர் முதல் திருவலம் கிராமம் வரை உள்ள கிராமப் பகுதிகளில் விவசாய நிலங்களின் வழியாக கடந்த 10 நாட்களாக உயர் மின்கோபுரம் அமைத்து மின் தட கம்பிகள் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisment

தங்களின் விவசாய நிலங்களின் வழியாக இந்த உயர் மின் அழுத்த பாதை செல்வதாலும் பாதை அமைக்கும் பணியின்போது விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து ஆகியவைற்றை சேதப்படுத்துகின்றனர். இதுகுறித்து மின் தொடர் கம்பிகள் அமைக்கும் நிறுவனத்திடம் விவசாயிகள் எடுத்துக் கூறியும் அவர்கள் இதை கண்டுகொள்ளாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்திவிட்டு, தங்கள் பணிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற விவசாயிகள் ராமமூர்த்தி, கோவிந்தராஜ், பிரபாகரன், தமிழரசன், கோபால், ரமேஷ், அய்யனார், ரகோத்தமன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த கம்பிகள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

Advertisment

இதுகுறித்து மின்பாதை அமைக்கும் ஒப்பந்தக்காரர்கள் மணலூர்பேட்டை காவல் துறையில் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்படி விவசாயிகள் அனைவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்தத் தகவல் அறிந்த அப்பகுதி விவசாயிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு அய்யனார், ரகோத்தமன் ஆகிய இருவிவசாயிகள் அப்பகுதியில் இருந்த உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி பாதிக்கப்பட்ட விவசாயிகளான எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். எங்கள் சக விவசாயிகளை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும். என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருக்கோவிலூர் டி.எஸ்.பி. ராஜி, தாசில்தார் சிவசங்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதனையடுத்து விவசாயிகளுக்கு நிலத்தில் மின்பாதை அமைக்கும் பணியின் காரணமாக விவசாய பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு நஷ்டஈடு பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்தனர்.

அதோடு கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் போலீசார் விடுவித்தனர். இதையடுத்து மின் கோபுரத்தில் ஏறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இருவரும் கீழே இறங்கி வந்தனர். இந்த சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளையும் அவர்கள் பயிர் செய்துள்ள விளை பயிர்களை சேதப்படுத்தியும் மின் பாதை அமைக்கும் பணி செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. விவசாயம் செய்யாத காலங்களில் இந்த மின் பாதை பணியை செய்ய வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.