Skip to main content

“முந்திரி இறக்குமதியை தடை செய்து, முந்திரி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்” - விவசாயிகள் கண்ணீர் 

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

 farmers demand Cashew farmers should be saved -

 

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், துணை ஆட்சியர் அபிநயா, வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா,  கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தில் பேசிய விவசாய சங்க தலைவர் மாதவன், “தற்போது குறுவை சாகுபடி தொடங்கியுள்ளதால் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். டெல்டா பகுதியில் பல ஆண்டுகளாக தூர்வாராத வாய்க்கால்களை தூர்வார வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். விவசாயி தேவநாதன் பேசும்போது, “தாட்கோ உள்ளிட்ட எந்த கடன்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஆகவே வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

குறிஞ்சிப்பாடி ராமலிங்கம் பேசும்போது, “குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் சாகுபடி அதிகஅளவில் செய்யப்பட்டுள்ளது. இந்த எள் அறுவடை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் செடியிலேயே எள் வெடித்து கீழே விழுந்து வீணாகின்றன. எனவே எள் அறுவடை இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

புதுக்கூரைப்பேட்டை கலியபெருமாள் பேசும்போது, “விருத்தாச்சலம் பகுதியில் சாகுபடி செய்யும் பயிர்களை குரங்குகள் நாசம் செய்து வருகின்றன. குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த புதுக்கூரைப்பேட்டை, விஜயமாநகரம் கிராம விவசாயிகளுக்கு நில பட்டா வழங்க வேண்டும். என்.எல்.சி தண்ணீரை விருத்தாச்சலம் மணிமுத்தாறு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க தலைவர் ரவீந்திரன் பேசும்போது, “கல்லணை முதல் கீழணை வரை 81 கிலோ மீட்டர் தூரம் கொள்ளிடம் ஆற்றின் மூலம் கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 1.52 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்று வருகிறது. தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் கதவணை, தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம், அரியலூர் மாவட்டம் இடையே தூத்தூரில் கதவணை கட்ட திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருகிறது. கீழணை பாசன உரிமைகள் காக்கும் பொருட்டு கல்லணை முதல் கீழணை வரை கதவணையோ, தடுப்பணையோ கட்ட எந்த நடவடிக்கை எடுக்கக் கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும். அனுமதியின்றி இயங்கும் இறால் பண்ணைகளை மூட வேண்டும்” என்றார்.

 

சின்னகண்டியங்குப்பம் குப்புசாமி பேசும்போது, “தானே புயலால் மாவட்டத்தில் முந்திரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதையடுத்து வெளிநாடுகளில் இருந்து முந்திரி இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் தற்போது உள்ளூர் முந்திரிக்கு சரியான விலை கிடைக்கவில்லை. முன்பு ஒரு மூட்டை முந்திரிக்கு ரூபாய் 15,000 கிடைத்தது. தற்போது ஒரு மூட்டைக்கு ரூபாய் 6000 தான் கிடைக்கிறது. இதனால் முந்திரி விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. குடும்பம் நடத்த முடியாமலும்,  குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையிலும் தவிக்கின்றோம். எனவே முந்திரி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்” என்று கண்ணீர் மல்க பேசினார். அவருக்கு ஆதரவாக பேசிய மற்ற விவசாயிகள், “முந்திரி விவசாயிகள் நலன் கருதி வெளிநாட்டில் இருந்து முந்திரி இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர் 

 

இறுதியாக பேசிய மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், “விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற கூட்டத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது கோரிக்கை குறித்து எடுத்துரைக்கும் போது அதனை பெயரளவில் கூட்டத்தில் பங்கேற்றவர்களாக இருக்காமல் அதிகாரிகள் தரப்பினர் குறிப்பு எடுத்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு வழி காண வேண்டும். இது தொடர்பாக அடுத்து வரும் அதிகாரிகள் மத்தியிலான கூட்டத்தில் கண்டிப்பாக நடவடிக்கை குறித்து தெரியப்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

 கடலூர் துறைமுகம் - மைசூர் விரைவு ரயிலுக்குச் சிதம்பரத்தில் மலர் தூவி வரவேற்பு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Cuddalore Port - Mysore express train welcomed with flowers at Chidambaram

மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலைச் சிதம்பரம் வழியாகக் கடலூர் துறைமுகம் வரை இயக்க வேண்டும் எனச் சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம், சிதம்பரம் வர்த்தக சங்கம், உள்ளிட்ட சிபிஎம் சிபிஐ விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி, சமூக அமைப்புகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனையொட்டி ரயில்வே நிர்வாகம் ஜூலை 19-ஆம் தேதியிலிருந்து மைசூர் மயிலாடுதுறை விரைவு ரயில் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும் என அறிவித்தது.  இந்த ரயில் கடலூர் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது அனைத்து கட்சிகள் சார்பில் மலர் தூவி வரவேற்று கோஷங்களை எழுப்பினார்கள். இதில் ரயில் பயணிகள் சங்கம், சி.பி.எம், சிபிஐ, எஸ்.எப்.ஐ, வி.சி.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்..

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில் பயணிகள் சங்கத்தில் தலைவர் முகமது ரியாஸ், “சிதம்பரம் ரயில் நிலையத்தில் செங்கோட்டைக் கம்பன் உள்ளிட்ட ரயில்கள் நிற்காமல் செல்கிறது. இதனை உடனடியாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் கோயம்புத்தூர் வரை செல்லும் ஜன் சதாப்தி ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் காலை நேரத்தில் திருச்சிக்குச் செல்வதற்கு ஏற்றார் போல் ரயிலை ஏற்க வேண்டும்” எனக் கூறினார்.

Next Story

சட்டமன்றம் வரை சென்ற வேட்டி விவகாரம்; வணிக வளாகத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Action against the shopping mall in bangalore

கர்நாடகா மாநிலம், பெங்களூர் மாகடி சாலையில் ஜி.டி. வேர்ல்ட் என்ற தனியார் வணிக வளாகத்தில் கடந்த 16ஆம் தேதி பகீரப்பா என்ற விவசாயி தனது மகன் நாகராஜுடன், அங்குள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க வந்துள்ளார். 

ஆனால், பகீரப்பா வேட்டி அணிந்து வந்திருந்ததால், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும், வேட்டி அணிந்து வந்ததால் விவசாயிக்கு அனுமதி அளிக்காத வணிக வளாகத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர், நேற்று அந்த தனியார் வணிக வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். விவசாயியை வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக வணிக நிர்வாகம், விவசாயி பகீரப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் கர்நாடகா மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியது. அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரம் சட்டமன்றம் வரையிலும் சென்றது. 

இந்த நிலையில், வேட்டி அணிந்து வந்த விவசாயியை உள்ளே விட அனுமதி மறுத்த வணிக வளாகத்திற்கு எதிராக அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அந்த வணிக வளாகத்தை ஒரு வாரத்திற்கு மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அந்த வளாகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.