தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களான கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (7.1.2024) மாலை முதல் திங்கள்கிழமை (8.1.2024) காலை வரை மிக கனமழை பெய்தது.
தொடர்ந்து இடைவிடாத இரவு நேரத்தில் பெய்த கனமழையால் 22 சென்டிமீட்டர் சிதம்பரம் பகுதியில் மழையின் அளவு பதிவாகியுள்ளது. இந்த மழையால் சிதம்பரம் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் வாய்க்கால்கள் வழியாக வடிந்துள்ளது. ஆனால், சிதம்பரத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ள கிள்ளை, தெற்கு பிச்சாவாரம், பொன்னந்திட்டு, தாண்டவராயன், சோழம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள மணிலா 1000 ஏக்கருக்கு மேலான பயிர்களின் வேர்கள் தொடர்ந்து தண்ணீர் நின்றதால், அழுகி வீணாகியுள்ளது. இதனை திங்கள்கிழமை காலை மழை சிறிது விட்டவுடன் மணிலா பயிரிட்ட விவசாயிகள் கண்ணன், சாமிதுரை, நடராஜன், ரமேஷ், சொக்கலிங்கம், பாக்கியராஜ், அருள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வயலுக்குச் சென்று மணிலா பயிர்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்க தலைவர் கண்ணன் கூறுகையில், மணிலா பயிர் ஒரு ஏக்கருக்கு போடுவதற்கு ரூ 48 ஆயிரம் செலவாகிறது. இதில் முதல் தடவை டிசம்பர் மாதம் மணிலா பயிரை போட்ட போது, அப்போது சிதம்பரம் பகுதியில் 17 சென்டிமீட்டர் மழை தொடர்ந்து பெய்ததால் போட்ட மணிலா பயிர்கள் அனைத்தும் வீணாகியது.
இதனை ஏர் ஒட்டி விட்டு மீண்டும் தற்போது மழை இல்லை என கருதி விவசாயிகள் ஜனவரி மாதத்தில் மணிலாவை போட்டனர். தற்போது பெய்த திடீர் மழையால் 90 சதவீத மணிலா பயிர்களில் தண்ணீர் நின்றதால் அனைத்து பயிர்களின் வேர்கள் அழுகி உள்ளது. இனிமேல் அதனை ஒன்றுமே செய்ய முடியாது. இது விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பகுதிகளில் 1000 ஏக்கருக்கு மேல் மணிலா பயிர்கள் வீணாகி உள்ளதை மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் நந்தினி கூறுகையில் விவசாயிகள் தெரிவித்தவுடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டேன். மணிலாவில் ஆங்காங்கே தண்ணீர் நிற்கிறது விவசாயிகளுக்கு தண்ணீர் வடிய வைப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இன்னும் ஒரு வாரம் கழித்து தான் பயிரின் தன்மை குறித்து கூற முடியும். பரங்கிப்பேட்டை பகுதியில் இந்த மழையால் நெல்வயல்களில் எந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே தண்ணீர் தேவையாக இருந்தது தற்போது மழையால் அது சரியாகி உள்ளது என்றார்.