Skip to main content

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் இல்லை; பரிதாபமாக பலியான விவசாயி

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

farmer passes away in puthukottai

 

தென்னை, பனை மரம் உள்ளிட்ட மரங்களில் பெரிய பெரிய கூடுகள் கட்டியுள்ள கதண்டுகள் என்னும் விஷ வண்டுகள் கடித்து பலர் பலியாகிவரும் சம்பவம் தொடர்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பு வழியாகச் சென்றவர்கள் பலரையும் கால்நடைகளையும் நேற்று முன்தினம் மாலை கதண்டு விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதில் காயமடைந்த பலரும் முதலுதவி சிகிச்சைக்காக வடகாடு 24 மணி நேர அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சென்றால் அங்கே இரவு பணிக்கு மருத்துவர் இல்லை. அதனால் அங்கிருந்த செவிலியர் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் சீட்டு எழுதிக் கொடுத்து அனுப்பியுள்ளார். 

 

சிலர் அரசு மருத்துமனைகளுக்கும் பலர் தனியார் மருத்துவமனைகளுக்கும் 108 ஆம்புலன்ஸ் உட்பட கிடைத்த வாகனங்களில் ஏறி சிகிச்சைக்காக சென்றனர். இதில் 2 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த 58 வயது கமருதீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி அபிதா பேகம் (50), அருணாசலம் (60), ராதா (33) உட்பட மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷ வண்டுகள் கடித்து விவசாயி கமருதீன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேநீர் மொய் விருந்து! தாய்மார்களுக்கு உதவிய சிவக்குமார்!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

puthukottai tea stall owner helped 11 women in his village

 

கஜா புயலில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உட்பட பல மாவட்டங்களில் கோடிக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தது. மின்சாரம் இல்லை தண்ணீர் இல்லை மொத்த விவசாயமும் காணாமல் போய் இருந்த நேரம். விவசாயிகள், பொதுமக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் இழந்து நின்ற நேரத்தில் அரசு, தனியார் உதவிகளை எதிர்நோக்கி இருந்தனர். அப்போது வங்கிகள், சுய உதவிக்குழு கடன், இன்ன பிற கடன்களை கட்ட நெருக்கடி கொடுத்தது. 

 

அப்போது தான், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமத்தில் டீ கடைக்காரர் சிவக்குமார், ‘எனது கடையில் டீ குடித்து கடன் வைத்துள்ள வாடிக்கையாளர்களான விவசாயிகள் கஜா புயலின் கோரபிடியில் சிக்கி தவிப்பதால் எனது கடைக்கு தரவேண்டிய கடன் தொகையை ரத்து செய்கிறேன்’ என்று போஸ்டர் எழுதி ஒட்டி சுமார் ரூ.30 ஆயிரம் ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தார். அதன் பிறகு இவரைக் காரணம் காட்டியே அரசியல் தலைவர்கள் மேடைகளில் பேசினர்.

 

அதன் பிறகு கடந்த கொரோனா காலத்தில் கிராமங்களில் உணவுக்காக தவித்த ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்களுக்காக இருப்பவர்களிடம் வாங்கி இல்லாதவர்களுக்கு அரசி, பால் உணவுப் பொருட்களை வழங்கி வந்தார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்த போது நிதி திரட்டி வழங்கினார்.

 

தற்போது புதுக்கோட்டை கேப்பரை பகுதியில் பகவான் என்ற பெயரில் தேநீர் கடை நடத்திவரும் சிவக்குமார், கடந்த வாரம் நலிவுற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ டீ அருந்தி மொய் செய்யுங்கள் என்று தேநீர் மொய் விருந்து நடத்தினார். ஒரு நாள் முழுவதும் தேநீர் குடித்தவர்கள் தங்களால் இயன்ற தொகையை மொய் சட்டியில் போட்டுச் சென்றனர். பலர் இணையவழியிலும் பணம் அனுப்பினர். மாலையில் ரூ.62 ஆயிரம் மொய் வசூலாகி இருந்தது. அந்தப் பணத்தில் 12 வெள்ளாடுகள் வாங்கிய சிவக்குமார் அதே பகுதியில் ஆதரவற்ற, மிகவும் பின்தங்கிய நலிவுற்ற குடும்பங்களை தேர்வு செய்து 11 பெண்களை அழைத்து 10 பெண்களுக்கு தலா ஒரு ஆடும், ஒரு பெண்ணுக்கு மட்டும் 2 ஆடுகளும் வழங்கினார். 

 

அப்போது அவர், “இது வெள்ளாடு ஆத்தா ஒரே நேரத்துல 2, 3 குட்டி  போடும். அடுத்த வருசம் நிறைய குட்டிகளோட உன் குடும்பம் நல்லா வரனும்” என்று சொல்லி ஆடுகளை பெண்களிடம் கொடுத்தார். “நீ நல்லா இருக்கனும் தம்பி” என்று சிவக்குமாரை வாழ்த்திவிட்டு சென்றனர்.

 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிலர், ‘போன மாசம் ஒருத்தர் கட்சிக்கொடி பறக்க காவித்துண்டோட வேன்லயே வந்தாரு. கூட்ட நெரிசல் கூட ஏற்பட்டுச்சு. தன் கட்சிக்காரர் கொடுத்த செம்மறிகிடா குட்டிய வாங்கி ஒரு அம்மாட்ட குடுத்து நிறைக குட்டி போடும்னுட்டு போனாரு. ஆனா நம்ம சிவக்குமாரு பரவாயில்ல சொந்த செலவுல மொய் விருந்து நடத்தி பல பேர்கிட்ட வசூல் பண்ணி 10 குடும்பம் வாழ ஆடு வாங்கி குடுத்துட்டார்’ என்று பேசிக் கொண்டனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

44 டன் விதைக் கடலையை முடக்கிய அதிகாரிகள்! 

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Officials blocked 44 tons of seed peanuts!

 

தமிழ்நாட்டுக்கே கடலை பருப்பு, கடலை எண்ணெய்க்கு விலை வைக்கும் இடமாக உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி. இங்கிருந்துதான் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விதைக் கடலை வாங்கிச் செல்கின்றனர். தற்போது பருவமழை பெய்து வருவதால் பல மாவட்ட விவசாயிகளும் விதைக் கடலை வாங்க தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

 

சில மாதங்களுக்கு முன்பு வரை ஏராளமான கடைகளில் இங்கு 'தரமான குஜராத், ஆந்திரா விதைக் கடலை' கிடைக்கும் என்று விளம்பர பதாகை வைத்திருந்தவர்கள், அதிகாரிகளின் சில ஆய்வுகளுக்குப் பிறகு விதை என்ற வார்த்தையை மறைத்துவிட்டு ‘தரமான கடலை கிடைக்கும்’ என்றே விளம்பர பதாகை வைத்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விதைக் கடலை விற்பனை அதிகரித்துள்ள நிலையில், திங்கள் கிழமை புதுக்கோட்டை விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயகமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் ஆலங்குடி கடலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

இந்த ஆய்வில் பல கடைகளிலும் இருந்த விதை கடலைகளுக்கு விதைச் சான்று இல்லாமல் இருப்பதும் முளைப்புத்திறன் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல ரூ. 35.20 லட்சம் மதிப்புள்ள சுமார் 43.82 டன் விதைக் கடலைகளை விற்பனை செய்யக் கூடாது என முடக்கி வைத்தனர். தொடர்ந்து விதைச் சான்று பெறாமல் விதைக் கடலை விற்பனை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல கடந்த ஆண்டும் விதைக் கடலை மூட்டைகள் விற்பனை முடக்கப்பட்டது.

 

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ‘ஆலங்குடி போனால் தரமான விதை கிடைக்கும் என்று நம்பியே பல மாவட்ட விவசாயிகளும் வருகிறோம். ஆனால் இங்கே முளைப்புத்திறன் குறைந்த, விதைச் சான்று பெறாத விதைகள் விற்பதாக அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே நேரம் ஆய்வு செய்த அதிகாரிகள் தரமான விதை இல்லையென்றால் விற்பனை செய்யக்கூடாது என்று முடக்கியுள்ள 43.82 டன் கடலையும், அதைக் கடைகளில் அப்படியே வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதிகாரிகள் சென்ற பிறகு இந்தக் கடலைகளை வியாபாரிகள் என்ன செய்வார்கள் திரும்பவும் எங்களிடமே தரமான விதை என்றுதானே விற்பனை செய்வார்கள். 

 

முடக்கிய விதை என்னாச்சு என்று இதே அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்வதில்லை. இதனால் பாதிக்கப்படுவது எங்களைப் போன்ற விவசாயிகள்தான். முடக்கிய கடலைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்களா என்றால் இல்லை. கடமைக்கு ஆய்வு என்று இல்லாமல் தரமற்ற கடலைகளை அறவைக்கு அனுப்பிவிட்டு தரமான விதைச் சான்று பெற்ற விதைகளை விற்பனை செய்வதை ஆய்வு மூலம் உறுதி செய்ய வேண்டும்’ என்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்