/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1227.jpg)
பெரம்பலூர் அருகே நூதன முறையில், விவசாயியின் கவனத்தைத் திசை திருப்பி, ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகேயுள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் வசிப்பவர் ரெங்கராஜ் (50). விவசாயியான இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 8 சவரன் தங்கச் சங்கிலியை அடகு வைத்திருந்தார். நேற்று (13.07.2021) மதியம் அடகு வைத்திருந்த தங்கச் சங்கிலியை மீட்டுக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பின்தொடர்ந்து இரு சக்கார வாகனத்தில் வந்துள்ளனர். நாட்டார்மங்கலத்தில் இருந்து ஈச்சங்காடு செல்லும் சாலையில் காட்டுக்கொட்டகையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த இருவரும், தங்களுக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டும் என ரெங்கராஜிடம் கேட்டுள்ளனர். நகை வைத்திருந்த பையை வீட்டு வெளியே அவரது இரு சக்கர வாகனத்தில் மாட்டிவிட்டு, தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் ரெங்கராஜ் சென்றுள்ளார்.
அப்போது அந்தப் பையில் இருந்த தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதனைப் பார்த்த ரெங்கராஜ் சத்தம் போட்டுள்ளார். உடனே அருகே வேலை செய்துகொண்டிருந்த அவரது மகன் வெங்கடேசன் இருசக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது, அவரை திருடர்கள் கீழே தள்ளிவிட்டுதப்பிவிட்டனர்.
இதுதொடர்பாக ரெங்கராஜ் பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், பெரம்பலூர் டி.எஸ்.பி. சரவணன், நேரில் வந்து விசாரணை நடத்தினார். பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம், நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)