
தமிழகத்தில் திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் வெளியாகிய விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது தொடர்பான போலியான தகவல்களை பரப்பியது பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் திடுக் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலியாக பரப்பப்பட்ட அந்த வீடியோ பீகார் மாநிலம் பாட்னாவில் எடுக்கப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. எவ்வித காயமும் ஏற்படாத சிலர் காயமடைந்ததைப் போல் சித்தரிக்கப்பட்டு வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவதில் முக்கிய நபராக இருந்த மணீஷ் காஷ்யப் என்ற யூடியூபரை தமிழக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து சென்ற தனிப்படை போலீசார் பீகார் போலீசாருடன் இணைந்து மணீஷ் காஷ்யப்பை விரட்டி பிடிக்கச் சென்றபோது தப்பித்து ஓடிய மணீஷ் பின்னர் பீகார் மாநிலம் ஜெகதீஸ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தமிழ்நாடு போலீசார் பீகார் போலீசாருடன் இணைந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணீஷ் காஷ்யப்பை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தவும் தமிழக தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மணீஷ் மீது தமிழ்நாட்டில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.