நாமக்கல் அருகே, போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த புகாரின் பேரில் அரசு மருத்துவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில், வட்டார மருத்துவ அலுவலராக ராஜேந்திரன் (58) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தமிழக பொது சுகாதாரத்துறையில் 1988ம் ஆண்டு மருத்துவர் பணியில் சேர்ந்தார்.
அவர் பணியில் சேர்ந்த போது, தான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்று கூறி போலி சாதி சான்றிதழ் கொடுத்துள்ளதாக சில ஆண்டுக்கு முன்பு அவர் மீது புகார் எழுந்தது. இது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மருத்துவர் ராஜேந்திரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பூங்கொடி, மருத்துவர் ராஜேந்திரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக பொது சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், அவரை பணியிடை நீக்கம் செய்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.