Extension of time to get preferential price bus travel card

சென்னையில் பயிலும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு சலுகை விலையில் பேருந்து பயண அட்டை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விநியோகித்து வருகின்றது. இந்த பேருந்து பயண அட்டைகள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி தேதி முதல் 13 ஆம் தேதி வரை சென்னை மாநகர பேருந்து நிலையங்கள் மற்றும் டிப்போக்களில் வழங்கப்படும். இதில் மாணவர்கள் 50 சதவிகித சலுகை கட்டணத்தில் பயண அட்டையைப் பெற்று பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

Advertisment

அதே சமயம் மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக மாணவர்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்ததால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பேருந்து பயண அட்டைகள் பெற முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சலுகை பயணச்சீட்டு அட்டையைப் பெற, கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் 19 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.