Skip to main content

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - இருவர் பலி!

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

 Explosion in Sivakasi firecracker factory - two loss their live

 

சிவகாசி அருகிலுள்ள விளாம்பட்டியில் பிரவீன் ராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, நாக்பூரிலுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. அந்த ஆலையில் பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரித்து வருகின்றனர். வழக்கம்போல் இன்றும் (15-ஆம் தேதி) 120 தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டபோது, தரைச்சக்கரப் பட்டாசுக்கான ரசாயன மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது.

 

இவ்விபத்தில் இடையங்குளத்தைச் சேர்ந்த தங்கவேல் மற்றும் கருப்பசாமி ஆகியோர் பலத்த காயமடைந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாரித்தாய், கருப்பம்மாள் ஆகிய பெண் தொழிலாளர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  இவ்விருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

வெடி விபத்து குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். இரண்டு பட்டாசு உற்பத்தி அறைகள் தரைமட்டமான நிலையில், நடந்த விபத்து குறித்து மாரனேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.