Skip to main content

எசகுபிசகா ஆயிருந்தா சுட்டு கொன்னுருப்பாங்க! - அனுபவம் பகிரும் ராஜேந்திர பாலாஜி!  

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

Ex. Minister Rajendrabalaji about prison experience

 

ஜெயிலில் இருந்து பெயிலில் வெளிவந்த பிறகு, ஆளாளுக்கு நேரில் சந்தித்தும்,  போனில் பேசியும் ‘டயர்ட்’ ஆக்கிவிட, ‘ஒன்மோர்’ கேட்காமலே பாசத்துடன்  கொரோனாவும் ஒட்டிக்கொள்ள, தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட நாட்களில், நட்பானவர்களிடம் நிறையப் பேசுகிறாராம், கே.டி.ராஜேந்திரபாலாஜி.   ‘யாருக்கும் பேட்டி இல்லை’ என்று  ‘நோ’ சொல்லிவிட்ட நிலையில், நட்பு வட்டத்தில் ஊடுருவிப் பெற்ற தகவல்களை, அவருடைய வாய்ஸிலேயே  ‘ரிபீட்’ செய்திருக்கிறோம்.   

 

“ஹைகோர்ட்ல பெயில் ரத்தானதும், போலீஸ்கிட்ட இருந்து தப்பிச்சு போகச்சொல்லி, யாரும் எனக்கு யோசனை சொல்லல.  விருதுநகர்ல ஆர்ப்பாட்டத்த முடிச்சிட்டு நானாத்தான் கிளம்பினேன். வெயில் ரொம்ப ஓவரா இருந்துச்சு.   தென்காசி வழியா குற்றாலத்த தாண்டி, நான் போன தமிழ்நாட்டு காரை அங்கேயே விட்டுட்டு, எனக்கு தேவையான வேறொரு காரை எடுத்துட்டு, நேரா கேரளா போனேன். கேரளாவுல மொதல்ல திருவனந்தபுரத்துல இருக்கணும்னு நெனச்சேன். ஆனா.. கோட்டயம் போனேன்.  அப்புறம் கொல்லம் போனேன்.  எல்லா இடத்துலயும் பிரச்சனை. அதனால, போய்க்கிட்டே இருந்தேன். ஒரு இடத்துல, நாங்க தங்கியிருக்கிற இடத்துக்கே போலீஸ் வந்திருச்சு.  நாங்களும் போலீஸ பார்க்கிறோம்.  ஆனா.. அவங்க கண்டுக்கல. அப்படியே எஸ்கேப் ஆயிட்டோம்.

 

நான் நெனச்சுகூட பார்த்ததில்ல. வனவாசம் போகணும்னு கர்மா இருந்திருக்கு. ஆமா.. வனவாசம் போயிட்டு திரும்பிருக்கேன்.  தமிழ்நாடு, அப்புறம் பாலக்காடு, கிருஷ்ணகிரி மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம்னு பூராவும் மலையடிவாரம் தான். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஸ்டேட்ல இருக்கிற மலையடிவார கோயில் எல்லாத்துக்கும் போயிருந்தேன். மொத்தத்துல காட்டுக்குள்ளதான் இருந்திருக்கேன். காரை நிப்பாட்டுனது கூட காட்டுல தான். பாத்ரூம் போனதும் காட்டுக்குள்ள தான். ஓடுற ஆத்து தண்ணில குளிக்கிறது, அங்கேயிருக்கிற கோயில்ல சாமி கும்பிடறதுன்னு ஒவ்வொரு நாளும் போனதே தெரியாம போச்சு.  

 

பெங்களூருல இருந்து 100 கி.மீ. தள்ளி ஒரு கெஸ்ட் ஹவுஸ். நூறு ஏக்கர்ல ஹவுசிங் போர்டு மாதிரி வீடுங்க. எல்லாம் பெரிய பெரிய வீடுகள். பள்ளிக்கூடம்,  வாட்ச்மேன், கடைன்னு எல்லாமே இருக்கு. கர்நாடகக்காரவங்க வசிக்கிற ஏரியா.  அந்த கர்நாடகக்காரருக்கு வயசு 35 இருக்கும். வீட்டுக்காரம்மா, 4 வயசுல குழந்தை மட்டும்தான் அந்தக் குடும்பத்துல.  என் மேல கேஸ் போட்டதுல இருந்து எல்லாத்தயும் சொல்லியாச்சு. அந்தம்மா   ‘அண்ணா.. நீங்க இங்கேயே தங்குங்க.. சாப்பாடு எல்லாம் நானே சமைச்சு போடுறேன்’னு சொன்னாங்க. எனக்கும் அந்த குடும்பத்துக்கும் ஒட்டும் கிடையாது.  உறவும் கிடையாது. தமிழ்நாட்டு குடும்பமா இருந்திருந்தா பயந்திருப்பாங்க. ஆனா.. அவங்க ஒரு சகோதரியா இருந்து அந்த அளவுக்கு ஹெல்ப் பண்ணுனாங்க. பிரச்சனை நெருங்கினதும் சொந்த கார் சாவிய கொடுத்து கிளம்பச் சொன்னாங்க. யாருக்கு இந்த மனசு வரும்? 

 

நான் வீட்லயும் தங்கினேன். லாட்ஜ்லயும் தங்கினேன். தோட்டத்துலயும் தங்கினேன். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடும் சாப்பிட்டாச்சு. கிராமத்துல போயி கஞ்சியும் குடிச்சாச்சு. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாகாரங்க சமையலும் சாப்பாடும் எப்படியிருக்கும்னு பார்த்தாச்சு. கர்நாடகக்காரங்க ஒருத்தர் வீட்ல, நாட்டுக்கோழி அடிச்சு குழம்பு வச்சாங்க. நான் சைவம்னு சொன்னேன். நல்லது அண்ணா.. உடம்புக்கு நல்லது. கொரோனாக்கு நல்லதுன்னு சொல்லி அந்த வீட்ல தமிழ்ல பேசினாங்க. எனக்கு ரசமும் பருப்பும் போதும்னு சொல்லி, கூட ஊறுகாயவும் வச்சி சாப்பிட்டேன். எனக்கு உதவுனவங்கள விசாரணைக்கு கூப்பிட்டிருக்காங்க. அவங்க எல்லாரும் தைரியமானவங்க. எனக்கு உதவுனவங்க, சோறு போட்டவங்க வீட்டுக்கெல்லாம் திரும்பவும் நன்றியுள்ளவனா போயிட்டு வரணும். 

 

அந்த நேரத்துல என்னோட வருத்தமெல்லாம், என்னைப் பெத்த அய்யாவும் அம்மாவும் என்னை நினைச்சு சரியா சாப்பிடமாட்டாங்கன்னுதான். 19 நாளும் கோயில் கோயிலா போனப்ப, அவங்களுக்கு மனதைரியத்தைக் கொடு சாமின்னு வேண்டிக்கிட்டேன். எல்லாமே சக்திவாய்ந்த திருத்தலங்கள்.  ஒரு ஊரு கோயில்ல பஜனை நடந்துச்சு. போயி உட்கார்ந்துட்டேன். அப்ப மாஸ்க்கூட போடல. எனக்கு தெரியும்.  யாரும் சொல்ல மாட்டாங்கன்னு. காட்டிக்கொடுக்க மாட்டாங்கன்னு. போலீஸ்கிட்ட பிடிபடற அன்னைக்கு,  என்கூட வந்த பாண்டிகிட்ட சொன்னேன். இன்னைக்கு ஏதாவது சிக்கல் வந்தாலும் வரும்னு. சொன்ன மாதிரியே ரெண்டு மணி நேரத்துல சிக்கல் வந்திருச்சு. அந்த இடத்த விட்டு போகக்கூடாதுன்னு மனசுல தோணுச்சு. அப்படி போகாம இருந்திருந்தா என்னை பிடிச்சிருக்க முடியாது. ஆனாலும், என்னை கூட்டிட்டுப்போன கர்நாடகக்காரரோட கட்டாயத்துல போயி மாட்டிக்கிட்டேன்.  இப்படியொரு வாழ்க்கை வாழணும்னு இருந்திருக்கு.  19 நாள் யாரு கண்ணுலயும் சிக்கக்கூடாதுன்னு இருந்திருக்கு. 19-வது நாள் போலீஸ்கிட்ட மாட்டணும்னு இருந்திருக்கு. மந்திரி பதவிய இறைவன்தான் கொடுத்தான். இந்த சோதனையவும் இறைவன்தான் கொடுக்கிறான். அதை ஏத்துக்கிட்ட மாதிரி இதையும் ஏத்துக்கணும்ல. 

 

தனி செல்லுல போட்டுட்டாங்கன்னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். தனி செல்லுனா எப்படி இருக்கும்னு திருச்சி ஜெயில்ல நானும் அனுபவிச்சேன். தரையில விரிக்கிறதுக்கு சின்ன போர்வை. உடம்ப மூடிக்கிறதுக்கு எதுவும் தரல.  ஒத்த லைட்கூட இல்லாம ராத்திரி ஃபுல்லா இருட்டுல, இடுப்புல இருந்து உடம்பு பூராவும் குளிர்ல நடுங்கும். கைய தலைக்கு வச்சிட்டு படுத்தேன். தூக்கமே வராது. கொத்துக் கொத்தா கொசு பயங்கரமா கடிக்கும். அந்த சின்ன ஜன்னல் வழியே நிறைய வண்டுகள் வீவீன்னு கத்திட்டு வர்றத பார்க்கிறப்ப பயமா இருக்கும். கைலிய நல்லா சுத்தி வச்சிருப்பேன். எல்லாத்தயும் அடிச்சே கொன்னுருவேன். காலைல பார்த்தா எல்லா வண்டும் செத்துக்கிடக்கும். ஜெயில்ல ஒரு தட்டுல சாப்பாடு கட்டியை கொண்டு வந்து வச்சு, அதுக்கு மேல ரசம் மாதிரி சாம்பாரை ஊத்துவாங்க. ஒரு ஊறுகாய் மட்டைகூட தரல.   இதயெல்லாம் சமாளிச்சிட்டேன்.  எந்த இடத்துக்கு போனா எப்படி வாழணுமோ, அதுக்கு தக்கன வாழப் பழகிட்டேன். 

 

Ex. Minister Rajendrabalaji about prison experience

 

நானும் வாய்விட்டு அப்படி பேசிருக்கக்கூடாது. அது தப்புதான். நம்ம நிலைமைக்கு இவ்வளவு பேச வேண்டிய அவசியம் கிடையாது. அந்த கோபம், அந்த குடும்பத்துல உள்ளவங்களுக்கு இருக்கத்தானே செய்யும். என்னைய பத்தி யாராவது பேசினா, என் அக்கா, தங்கச்சி கோபப்பட மாட்டாங்களா? அது மாதிரிதான் இதுவும். அதனால, என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். இருந்தாலும் என்னைப் பிடிக்கிறதுக்காக இத்தனை கோடி செலவு பண்ணவேண்டிய அவசியம் இல்ல. கொஞ்சம் எசகுபிசகா ஆயிருந்தா என்னைச் சுடச் சொல்லிருப்பாங்க. எல்லாமே முடிவு செய்யப்பட்டது. உயிர் போகவேண்டிய விதி இருந்தா, அது நடந்தே தீரும். இதுல என்னோட பங்களிப்புன்னு எதுவும் இல்ல. வாழ்க்கையோட ஓட்டத்துக்கு ஏற்றமாதிரி ஓடிட்டே இருக்கவேண்டியதுதான். 

 

எனக்கு சுப்ரீம் கோர்ட்ல ஜாமீன் கிடைச்சது தெய்வ கடாட்சம்தான். என்னை அரெஸ்ட் பண்ணுனதுக்கு அப்புறம் ட்ரெண்டே மாறிருச்சு.  இது பொய் வழக்குன்னு எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சு. ஜெயில்ல அடிக்கடி தியானத்துல இருந்தேன். எனக்கு ஏற்பட்ட இழுக்கை தீர்த்துவை. இந்த களங்கத்தை துடைச்சிருன்னு வேண்டிக்கிட்டேன். ஒரு பெரிய சக்தி இருக்கு. அது, தகப்பன் ஸ்தானத்துல இருந்து என்னை கவனிச்சிக்கிட்டே இருக்கு. ஜெயில்லகூட அதை நான் உணர்ந்தேன். ஷீரடி சாய்பாபா என் கூடவே இருந்தாருன்னு சொன்னா, எல்லாரும் என்னைக் கிறுக்கன்னு நினைப்பாங்க. ஆனா.. சாய்பாபா இருந்தது உண்மை. அமைச்சரா இருந்தப்ப மேடையேறி பேசினேன் மேல இருக்கவன் பார்த்துக்குவான்னு. இப்பவும் அதைத்தான் சொல்லுறேன், எல்லாம் அவன் (இறைவன்) செயலே! நான் தலைமறைவாக இருந்த நாட்களில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை, ஒரு முழுநீளத் திரைப்படமாகவே எடுக்கலாம். அந்த அளவுக்கு திருப்பங்களும்,  நம்பமுடியாத ஆச்சரியங்களும் ஏராளம் உண்டு.”

 

தன்னைச் சந்தித்து ஆறுதல் கூற வந்து, அன்பைப் பொழிந்த நெருக்கமானவர்களிடம்,   துளியும் அரசியல் பேசாமல்  ’நான் கற்ற பாடமும் படிப்பினையும் இதுதான்..’ என்கிற ரீதியில் அனுபவத்தைப் பகிர்ந்துவருகிறாராம்,  ராஜேந்திரபாலாஜி! அவருடைய மருத்துவ நண்பர் ஒருவர் நம்மிடம் “கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ? பக்தி உண்மையோ, பொய்யோ? ஆனால், கடும் சோதனையான தருணங்களில் பலருக்கும் இறைநம்பிக்கை மிகப்பெரும் ஆறுதலாக இருப்பதை மறுப்பதற்கில்லை. தியானப் பயிற்சியின் மூலம் உள்ளுணர்வை வளர்த்துக்கொள்ள முடியும். தன்னைத்தானே அறிந்துகொள்ளவும் முயற்சிக்கலாம். உள்ளுணர்வு என்பது,   பகுத்தறியும் எண்ணமின்றி நம்முள் கடத்தப்படும் எண்ண ஓட்டங்களே. இதை,   ‘ஆழ்மனதில் பதிந்துள்ள அறிவு, ஆழ்மனதின் அறிவாற்றல், உள் நுண்ணறிவு, ஆழ்மனதில் பதிந்துள்ள தகவல்களைத் திரட்டி ஒரு செய்தியை முன்வைப்பது’ என்றெல்லாம் உளவியல் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்துகின்றனர். முழுமையான ஆதாரத்தின் அடிப்படையில் ஓர் உணர்வு தோன்றினால் மட்டுமே அதைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்கிறார் சிக்மன்ட் பிராய்ட். 

 

தாய், தந்தை மீது அளவில்லாத பாசம் வைத்திருப்பவர் ராஜேந்திரபாலாஜி. கே.டி. என்ற இனிஷியல்,  அவருடைய பெற்றோரான கிருஷ்ணம்மாள், தவசிலிங்கத்தின் பெயரைக் குறிக்கும். தமிழகத்தில் ஊருக்கு ஊர் கோவில் கட்டி,   பலராலும் மகானாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சாய்பாபா மீதான அதீத நம்பிக்கையில், ராஜேந்திரபாலாஜியின் உள்ளுணர்வு, தேவையான நேரங்களில் அவருக்கு சமிக்ஞைகள் தந்தனவோ, என்னவோ!” என்று உளவியல் பேசினார். 


புரியாத புதிர்தானே வாழ்க்கை!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயபிரபாகரனுக்கு சாலியர் மகாஜன சங்கம் ஆதரவு! - ராஜேந்திரபாலாஜி வீட்டில் நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Saliyar Mahajana Sangam support for Vijaya Prabhakaran

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சமுதாய ரீதியிலான வாக்குகளைப் பெறுவதில் அரசியல் கட்சியினரும், போட்டியிடும்  வேட்பாளர்களும் முனைப்பு காட்டிவருகின்றனர். அதற்காக, சமுதாயப்  பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. குறிப்பாக, அருப்புக்கோட்டையிலும் சாத்தூரிலும் சாலியர்கள் அதிகமாக  வசிக்கின்றனர். இந்நிலையில், சாலியர் மகாஜன சங்கமும், நெசவாளர் முன்னேற்றக் கழகமும், இத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.  

சாலியர் மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவரான ஏ.கணேசன் தலைமையில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்கல்லில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தபோது, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனும் உடனிருந்தார்.  தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், எந்தெந்தப் பகுதிகளில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது  குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தினார்கள்.  

Next Story

“விஜயபிரபாகரன் பெயரிலேயே பெரிய ராசி இருக்கிறது” - ராஜேந்திரபாலாஜி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
"Vijay Prabhakaran has a great sign in his name" - Rajendra Balaji

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் அறிமுகக் கூட்டம் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன், தனது வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாக்கு சேகரித்துப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி. ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “இந்தத் தொகுதிக்குள் தான் எய்ம்ஸ் மருத்துவமனை, காமராஜர் பல்கலைகழகம், ஏர்போர்ட் எல்லாமே வருகிறது. எனவே  இவை நமக்குத்தான் சொந்தம். மொத்தத்தில் தென்மாவட்ட மக்களின் கெப்பாசிட்டி தம்பி விஜய பிரபாகரன் கையில் உள்ளது. இவர் வெற்றிபெற்று எம்.பி. ஆவதை இனி யாராலும் தடுக்க முடியாது. தமிழர்களின் உரிமைக்காகவும் பெருமைக்காகவும் உழைக்கின்ற கட்சி அ.தி.மு.க.

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி ராசியான கூட்டணி. தற்பொழுது உள்ள எஸ்.டி.பி.ஐ. இஸ்ஸாமிய அமைப்புகளில் மிகவும் வலிமையானது. அந்த அமைப்பு நமக்கு வலுவான துணையாக நிற்கிறது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என மதம் பார்க்காமல் அனைவருக்கும் உழைத்த கட்சி அ.தி.மு.க. எங்களை இனத்தை, சொல்லி மதத்தைச் சொல்லி பிரிக்க முடியாது. சிவகாசியில் பேசிய இ.பி.எஸ். ஓங்கிய குரலில் கொட்டும் முரசுக்கு ஓட்டு கேட்டு முழங்கினார். அது டெல்லி வரைக்கும் ஒலித்திருக்கிறது. கூட்டணிக் கட்சிக்கு மரியாதை கொடுத்து அங்கீகரிக்கக் கூடிய கட்சி அ.தி.மு.க.. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழுக்காகப் பெருமை சேர்த்தவர். நாங்கள் தற்போது கூட்டணியில் இல்லாவிட்டாலும், அவர் அ.தி.மு.க. கூட்டணியில்தான் முதன் முதலில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"Vijay Prabhakaran has a great sign in his name" - Rajendra Balaji

கூட்டணி என்றாலே முதலில் அமர்ந்து பேசிவிட வேண்டும். தொகுதிகள் சின்னம் ஆகியவற்றைச் சரியாக முடிவு செய்யவேண்டும். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் பெயரில் பெரிய ராசி இருக்கிறது, வசியம் இருக்கிறது. அது எனக்கு நன்றாகத் தெரியும் அவர் வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அவர் ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். நாளை முதல் தொகுதியில் 100 இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தேர்தலில் பிரச்சாரமே வேண்டாம் என்று ஒரு அணியும், ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்க என்று ஒரு அணியும் சுற்றித் திரிகிறது. விஜயபிரபாகரன் வெற்றிக்கு அ.தி.மு.க. கூட்டணி கடுமையாக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். கூட்டணிக்  கட்சித் தலைவர்கள், அவருடைய வெற்றிக்குப் பாலமாக இருக்கவேண்டும். உங்களுக்குத் தேவையானவற்றை அ.தி.மு.க. இயக்கம் செய்யும். அதற்கு நான் முழு பொறுப்பு. தம்பி விஜய பிரபாகரன் பொறுப்பு. அதிமுக அடுத்து ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.” என்றார்.