Skip to main content

‘எது சனநாயகம்?’ - எழுத்தாளர் நா. அருணின் முதல் படைப்பு

Published on 12/02/2024 | Edited on 13/02/2024
'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

‘பிரதமர் இளைய எழுத்தாளர்’ திட்டத்தின் கீழ் எழுத்தாளர் நா. அருண் எழுதிய எது சனநாயகம்? என்ற நாவல் நூலாக்கம் பெறத் தேர்வாகியுள்ளது. இந்தியக் கல்வி அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் தேசியப் புத்தக அறக்கட்டளை ரூ. 3 லட்சம் உரிமைத் தொகை வழங்கி, நூலை ஓராண்டிற்குள் 23 மொழிகளில் மொழிபெயர்த்து, அதனை இந்திய அரசின் மிக முக்கிய ஒருவரைக் கொண்டு வெளியிடவிருக்கிறது. 

இது தொடர்பாக எழுத்தாளர் நா. அருண், “என் நூலின் தலைப்பு ‘எது சனநாயகம்?’ இது தொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருடன் ஓர் உரையாடலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டேன். எழுத்தாளராகத் தமிழ் இலக்கிய உலகினில் என் முதல் படைப்பான ‘எது சனநாயகம்?’ என்ற நூலுடன் வெகு விரைவில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறேன்.

'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

இத்தனை ஆண்டுகாலமாக என் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் இருக்கும் சுயமரியாதையும் பேசாப் பொருளும் குரலற்றவர்களின் குரலும் இனிவரும் என் நூல்களிலும் இருக்குமென்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கிய உலகில் யாருக்கும் அடிவருடிக் கொடுக்காமல், யார் காலிலும் விழாமல், யாரையும் ஆசானாக ஏற்காமல், சொந்தச் சரக்கை மட்டும் நம்பி சுய அறிவை மட்டும் துணையாக்கி எழுத வந்திருக்கிறேன். வரலாறு என்னை நினைவில் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

போட்டித் தேர்வர்களுக்கு உதவும் மாற்றுத்திறனாளி ஆசிரியரின் நெகிழ்ச்சி செயல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Visually Impaired Teacher's Resilience Act Helps Competitive Exams

வயிற்றுப் பசியைப் போக்க நல்ல உணவு கிடைக்கிறது. நம் அறிவுப் பசியைப் போக்க நல்ல நல்ல புத்தகங்களும் கிடைக்கிறது. ஆனால் பார்வை மாற்றுத்திறனாளியான நமக்கு (பிரைலி) பாடப் புத்தகங்கள் மற்ற நல்ல புத்தகங்களை வாசிக்கும் வசதிகள் கிடைக்கவில்லையே! என்ற ஏக்கம் கல்லூரி மாணவரான பொன்.சக்திவேலுக்கு ஏற்பட்டது. ஒரு நாள் வகுப்புகளுக்குப் போகவில்லை என்றாலும் அந்தப் பாடத்தை அறிந்து கொள்ள முடியாத நிலை. நடத்தும் பாடத்தைக் கூட மறுபடி படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு சிறிய ஆடியோ ரெக்கார்டரை வாங்கி ஆசிரியருக்கே தெரியாமல் பதிவு செய்து விடுதியில் வந்து அதைத் திருப்பிக் கேட்கத் தொடங்கினார்.

இந்த முறை நல்லா இருக்கிறதே என்று நினைத்தார். அப்போது தான் கூகுள் எழுத்துணரியாக்கத்தை அறிமுகம் செய்தது. ஆய்வு நிறைஞர், முனைவர் பட்டத்திற்கான தேடல்களுக்கு எழுத்துணரியாக்கம் கை கொடுத்தது. இதற்காக நவீன ஸ்கேனர் வாங்கி நண்பர் உதவியுடன் அதனைப் பயன்படுத்தித் தான் விரும்பும் புத்தகங்களை வாங்கி ஸ்கேன் செய்து குரல் மொழியாக மாற்றி அதனை அறிந்து கொண்டார். நவீன இலக்கியங்கள், வரலாறு, அறிவியல் என ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து தன் அறிவுப் பசியை போக்கினார். 

Visually Impaired Teacher's Resilience Act Helps Competitive Exams

தான் மட்டும் அறிந்து கொள்வது மட்டும் போதாது தன்னைப் போல உள்ள மற்றவர்களும் படிக்க வேண்டும் என்பதை உணர்ந்த சிலட்டூர் அரசுப் பள்ளி தமிழாசிரியர் பொன்.சக்திவேல் ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கி தன்னைப் போலப் புத்தக தேடல்களில் இருக்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளை ஒன்றிணைத்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை மின்னூலாக்கிக் கொடுத்து வருகிறார். இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான 10 லட்சம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களை மின்னூலாக்கிக் கொடுத்திருக்கிறார். இதனால் பலர் ஆய்வுப் படிப்புகள் முதல் போட்டித் தேர்வுகளுக்கான படிப்புகள் வரை படித்து வருவதுடன் இலக்கியங்களையும் படித்துப் பயனடைந்து வருகின்றனர்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி சண்முகநாதபுரம் பொன்.சக்திவேல் (சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர்) நம்மிடம் பேசுகையில், “பார்வை மாற்றுத்திறனாளிகள் படிப்பதற்கும் படித்ததை மறுபடி படித்துப் பார்க்கவும் சிரமப்படுகிறோம். வகுப்பறையில் இலக்கியங்கள், வரலாறுகள் நடத்தும் போது அதை முழுமையாக நாம் படிக்க வேண்டும் என்ற ஆசை வரும். ஆனால் சராசரியான புத்தகங்களை நம்மால் படிக்க முடிவதில்லை. இது போல நானும் பாதிக்கப்பட்டேன். அதனால் தான் நாம் விரும்பிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் முனைவர் பட்டத்திற்காகப் படிக்கும் போது நிமிடத்திற்கு 160 பக்கம் ஸ்கேன் செய்யும் ஸ்கேனர் வாங்கினேன். அதில் புத்தக பைண்டிங்களை பிரித்து வைத்தால் வேகமாக ஸ்கேன் செய்யும். அப்படியே எழுத்துணரியாக்கம் செய்து கொள்ள 1000 பக்கத்தை அரை மணி நேரத்தில் குரல் மொழியாக்கிவிட முடிகிறது. 

Visually Impaired Teacher's Resilience Act Helps Competitive Exams

நம்மைப் போல மற்றவர்களும் படிக்க வேண்டும் என்று ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கி விருப்பம் கேட்டேன். தற்போது வரை 34 பேர் இணைந்திருக்கிறார்கள். சென்னை, மதுரை, கோவை என எந்த ஊரில் புத்தகத் திருவிழா நடந்தாலும் ஒவ்வொரு உறுப்பினரும் படிக்க ஆசைப்படும் புத்தகங்களின் விபரங்களைச் சேகரித்து அதற்கு ஆகும் செலவுத் தொகையை அனைவரும் பங்கிட்டு புத்தகங்களை வாங்கி மின்னாக்கம் செய்து அனுப்புகிறேன்” எனத் தெரிவித்தார். இதுவரை எத்தனை புத்தகங்கள் மின்னாக்கம் செய்திருப்பீர்கள்? என்ற கேள்விக்கு, “சுமார் ஆயிரம் புத்தகங்கள். அதாவது 10 லட்சம் பக்கங்கள் மாற்றி இருக்கிறோம். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, ஆனந்தரங்கர் நாட்குறிப்பு உள்பட அதிக பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் மின்னாக்கி படிச்சு முடிச்சாச்சு. அதே போலக் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி முதல்வர் வரை அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை எனக்கு அனுப்புவார்கள் அதனை உடனே மின்னாக்கம் செய்து கொடுக்கிறேன். கிருஷ்ணகிரி கல்லூரி முதல்வர் கண்ணன் சாருக்கு மட்டும் 200 புத்தகங்கள் மின்னாக்கம் செய்து கொடுத்திருக்கிறேன். எங்கள் வாட்ஸ் அப் குழு மூலமாக இதுவரை 6 சுற்றுகளாக சுமார் 350 புத்தகங்கள் வாங்கி மின்னாக்கம் செய்திருக்கிறோம்.

அதே போலப் போட்டித் தேர்வுகளுக்குப் பலருக்கும் இந்த மின்னாக்கம் பேருதவியாக உள்ளது. பலர் வேலை வாங்கிட்டாங்க. பலர் பதவி உயர்வுக்கும் பயன்கிடைத்திருக்கும். இன்னும் ஏராளமான ஆய்வு மாணவர்கள் படிக்க உதவியாக உள்ளது. கடந்த வாரம் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியை உதவிப் பேராசிரியர் தேர்வு படிக்கத் தேவையான புத்தகங்களை வாங்கி எனக்கு அனுப்பிவிட்டுத் தேர்வுக்குக் குறைவான நாட்களே உள்ளது சீக்கிரமாக மின்னூலாக்கி அனுப்புங்கள் என்றார். மாலை 4 மணிக்கு வந்த புத்தகங்களை இரவு 9 மணிக்குள் 2500 பக்கங்களையும் ஸ்கேன் செய்து மின்னூலாக்கி அனுப்பிட்டேன். அதைப் பார்த்த அந்த ஆசிரியைக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தேர்வில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல ஸ்கேன் செய்யப்பட்ட புத்தகங்களைக் குரல் மொழியாக்குவது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் அந்த புத்தகங்களை எளிமையாக பிரைலி எழுத்து புத்தகங்களாக மாற்றி எப்போதும் வைத்திருந்து படித்துப் பாதுகாக்க முடிகிறது. இப்போது நூலகங்களில் மின்னாக்க நூல்களை வைக்க முதலமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். 

Next Story

“தேர்தல் ஆணையத்திற்கு நன்றி” - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
“Thank you Election Commission” - President Draupathi Murmu

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் நேற்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குதிரைப்படை வீரர்களின் பாரம்பரிய அணிவகுப்பு முறைப்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்தார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு வந்தடைந்தவுடன் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் செங்கோல் ஏந்தி வழி நடத்தி சென்றார். 

“Thank you Election Commission” - President Draupathi Murmu

இதனையடுத்து திரௌபதி முர்மு பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “கோடிக்கணக்கான நாட்டு மக்கள் சார்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது உலகின் மிகப்பெரிய தேர்தல். ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகால கால வாக்குப்பதிவுகளின் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. கடந்த 4 தசாப்தங்களாக காஷ்மீரில் குறைந்த வாக்குப்பதிவைக் கண்டது. ஆனால் காஷ்மீர் இந்த முறை இந்தத் தேர்தல் அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்தது. 

“Thank you Election Commission” - President Draupathi Murmu

6 தசாப்தங்களுக்குப் பிறகு நாட்டில் முழுமையான பெரும்பான்மையுடன் 3வது முறையாக நிலையான அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் மூன்றாவது முறையாக இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களுக்குத் தெரியும். இந்த மக்களவை அவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற முடியும் என்று. 18 வது மக்களவை பல வழிகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மக்களவை ஆகும். நாட்டின் அரசியலமைப்பின்படி வரவிருக்கும் அமர்வுகளில் இந்த பட்ஜெட் அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் பெரிய பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கான ஒரு பயனுள்ள ஆவணமாக இருக்கும். சமூக மற்றும் பல வரலாற்று சாதனைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும்.

சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை இந்தியாவை உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது. நாட்டில் பல்வேறு தொற்றுநோய்கள் மற்றும் மோதல் போக்குகள் இருந்தபோதிலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 11 வது இடத்தில் இருந்து 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்தது. உலகின் சில பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகளால் இந்தியா இந்த வளர்ச்சி விகிதத்தை அடைய முடிந்தது. இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்ததாகக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியபோது எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மணிப்பூர், மணிப்பூர் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.