Skip to main content

’’இந்தியா முழுவதும் விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்’’- ஈஸ்வரன் வேண்டுகோள்

Published on 30/03/2020 | Edited on 30/03/2020
e


 அறுவடைக்கு தயாராக இருக்கின்ற பல காய்கறிகள், பழங்கள், பூக்கள் அறுவடை செய்து என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் முடங்கிப்போய் இருக்கிறார்கள். 

 

கறந்த பாலையும் விற்க முடியாமல் பால் உற்பத்தியாளர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் எப்போதும் போல் கிடைக்குமென்று அரசு அறிவித்திருந்தாலும் அத்தியாவசிய பொருட்களை தேவையான இடங்களுக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வேதனையை தெரிவித்துள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.  இது குறித்த அவரது அறிக்கையில் மேலும், 

 

’’தினசரி உற்பத்தியாகின்ற கோடிக்கணக்கான முட்டைகளும் நாமக்கல்லில் தேங்கி கிடக்கிறது. சரியான வழிமுறைகளை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். காவல்துறைக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். தினசரி கோடிக்கணக்கில் வியாபாரமாகின்ற மல்லிகை, செவ்வந்தி, ரோஜா போன்ற  மலர்கள் செடிகளிலேயே வாடி கொண்டிருக்கின்றன.

 

 ஊரடங்கு உத்தரவுக்கு முன் பறிக்கப்பட்ட மலர்கள் ஆங்காங்கே மண்டிகளில் அழுகிப்போய் கிடக்கிறது. தோட்டத்தில் ஒரு கிலோ தக்காளியை 10 ரூபாய்க்குதான் வாங்குகிறார்கள். கோயம்பேடு போன்ற சந்தைகளில் வரத்து குறைவாக இருக்கிறது என்று காரணம் காட்டி ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

 

மாட்டினுடைய மடிகளிலே பாலை விட முடியாது. கன்றுக்குட்டிகளுக்கும் ஒரு அளவுக்கு மேல் தர முடியாது என்ற நிலையில் பாலை கறந்து தரையிலே ஊற்றுகின்ற அவலம் அரங்கேறுகிறது. அரசும், தனியார் நிறுவனங்களும்  உற்பத்தியாகின்ற பாலை கொள்முதல் செய்ய முடியும். குளிரூட்டும் நிலையங்களில் வைக்க முடியும். பால் பவுடர், வெண்ணெய் கட்டிகள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து இருப்பில் வைத்துக்கொள்ள முடியும். 

 

 அரசினுடைய வழிகாட்டுதல் நடைமுறைகள் காவல்துறை அதிகாரிகளுக்கு சேராத காரணத்தினால் ஆங்காங்கே காய்கறி வண்டிகள் தடுக்கப்படுகின்றன. இதற்கான தீர்வை அரசு உடனடியாக காணவில்லை என்று சொன்னால் வறட்சியிலே தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளை விட இப்போது தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகமாவார்கள். 

 

தமிழகத்திலே உற்பத்தியாகின்ற காய்கறிகள், மலர்கள், முட்டை போன்ற பொருட்கள் அதிகமாக பக்கத்தில் இருக்கின்ற கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்வது வழக்கம். மற்ற மாநிலங்களுக்கு இவற்றை அனுமதிக்கவில்லை என்று சொன்னால் நாம் எதிர்பார்க்கும் அனைத்து விபரீதங்களும் நடக்கும். அதேபோல பக்கத்து மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறையும் நிலவும். அதனால் அத்தியாவசிய பொருட்களுக்காக மாநில எல்லைகள் பாதுகாப்பாக திறக்கப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்று எல்லை வழியாக பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள முடியும். 

 

நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டால் விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்த அத்தனை பணமும் வீணாகப்போகும். கடனை திருப்பி கட்ட முடியாது. இந்தியா முழுவதும் விவசாயிகள் வாங்கி இருக்கின்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.’’என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.    

                            

சார்ந்த செய்திகள்

Next Story

"பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும்"- ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

"Only by stopping cotton exports can the textile sector be saved" - ER Eswaran MLA Request!

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று (16/05/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித் துறையை சார்ந்த அனைவரும் செய்வதறியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தமிழகம் எதிர்கொண்டு இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு மேலாக, இதே சூழ்நிலை நீடிக்கின்ற நிலையிலும் ஒன்றிய அரசு இதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. 

 

உடனடியாக பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும். பாதிப்பின் தீவிரத்தை உணராமல் ஒன்றிய அரசு அமைதி காப்பது வேதனையை அதிகப்படுத்துகிறது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவில் பஞ்சு பதுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் பயன்பாட்டுக்கு வராமல் நூல் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து பஞ்சு எடுக்கப்பட்டது தான் இந்த கொடுமைக்கு காரணமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேலும் தங்களை தாங்களே நஷ்டப்படுத்தி கொண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். 

 

தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தொடர்ந்து கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தொழில் துறையை சார்ந்தவர்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முறையீடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கு அப்புறமும் ஒன்றிய அரசு கண்டு கொள்வதாக இல்லை. தமிழகத்தினுடைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழக ஜவுளி துறையின் உண்மை நிலையை ஒன்றிய அரசுக்கு எடுத்து செல்ல வேண்டும். இது இன்றியமையாத ஆக்கப்பூர்வமான தமிழகத்தின் தேவை. நூல் விலை விஷயத்தில் கருத்துக்களை கூறாமல் அமைதி காப்பதும் ஏற்புடையதல்ல. உடனடியாக உங்கள் முயற்சிகளை தொடங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

“முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதை காட்டுகிறது” - ஈஸ்வரன்

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

It shows that the relationship between the Chief Minister and the Deputy Chief Minister is not smooth says Eeswaran

 

"வெறும் சம்பிரதாயத்திற்கு வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இடைக்கால நிதிநிலை அறிக்கை இருக்கிறது" என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், "2011-ஆம் ஆண்டிலே 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடனை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்த்தி தமிழக மக்களைக் கடனாளிகளாக மாற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்த நிதிநிலை ஆண்டில் கடன் வாங்க தேவை இருக்காது என்று அறிவித்திருப்பது அமைய இருக்கின்ற புதிய ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையா? 


தமிழகத்தின் வருமானம் 18 சதவீதம் குறையும் என்று அறிவித்துவிட்டு அரசினுடைய விளம்பரங்களுக்காக நூற்றுக்கணக்கான கோடியை தேர்தலை குறிவைத்துச் செலவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக தமிழக அரசின் மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்படும் என்ற மக்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் மீதான வரி வருங்காலத்தில் உயரும் என்று சொல்லியிருப்பது வேதனையிலும் வேதனை.

 

காலாவதியாகப் போகிற அரசு போகிற போக்கில் 6,600 கோடியில் கோவையில் மெட்ரோ ரயில் என்று அறிவித்திருப்பது தேர்தலை குறிவைத்து நடத்தியிருக்கின்ற நாடகம். கவலையும் கஷ்டமும் வேதனையும் தவிர தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மிஞ்சி இருப்பது எதுவுமில்லை. பலவிதமான சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லாதது முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதைக் காட்டுகிறது. எதிர்பார்த்த சலுகை அறிவிப்புகள் எல்லாம் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பதற்காகக் காத்திருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.