கரோனா... கரோனா... என்று, பேசக் கூடிய அனைத்து உதடுகளையும் பேச வைத்த இந்த வைரஸ் என்று ஒழியும் என்று யாருக்கும் தெரியவில்லை. அது அழிகிறதோ இல்லையோ ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் முற்றாக அழிந்து அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஊரடங்கால் மக்களின் உள்ளத்தையும், உழைப்பையும் முடமாக்கி போட்டுவிட்ட மத்திய, மாநில அரசுகள், உழைக்க கூடிய சக்தி இருந்தாலும், எந்த தொழிலிலும் உடனே உற்பத்தி செய்ய வாய்ப்பே இல்லை. இந்த நிலையில் தமிழக அரசு வருவாயை ஈட்டுவதற்காக திட்டமிட்டு அறிவித்தது தான் 7ந் தேதி முதல் டாஸ்மாக் மது கடைகள் திறப்பு என்பது.
'ஐயா அரசாங்கத்தை நடத்துபவர்களே மதுக்கடைகளை திறக்காதீங்க... வேறு வழியில்லாம வீட்டில் உள்ள பொருட்களை வித்து அந்தப் பணத்தில் குடிப்பார்கள்.. வேண்டாமய்யா இந்த குடி கெடுக்கும் குடி' என பெண்களின் குரல் தமிழகம் முழுக்க ஒலிக்கிறது. பிரதான எதிர்கட்சியான தி.மு.க.வும் அதன் தோழமை கட்சிகளும் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட வடிவமாக 7ந் தேதி அவரவர் வீடுகளில் இருந்து கறுப்பு பேட்ஜ் அணிந்து அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்க அறிவித்துள்ளது. இந்த நிலையில் இது போல ஈரோட்டில் இன்று பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தற்கு போலீசார் அவர்களை கைது செய்து வைத்துள்ள கொடுமையும் நடந்துள்ளது.
ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்குட்பட்ட எஸ்.எஸ்.பி.நகர் என்ற பகுதியில் ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என சிலர் அவர்கள் வீட்டின் முன் நின்று டாஸ்மாக் கடைகளை திறக்காதே என ஒரு அட்டையில் எழுதி அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளனர். இது ஈரோடு போலீசாருக்கு தெரிய வர ஈரோடு வடக்கு காவல் நிலைய காவலர்கள் அங்கு சென்று ஆண்கள் மூன்று பேர், பெண்கள், சிறுவர்கள் தலா இரண்டு பேர் என ஏழு பேரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி கூட்டிச் சென்று காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர். மாலைக்கு பிறகு இரண்டு சிறுவர்களையும் விட்டு விட்டு ஐந்து பேரை மட்டும் காவலில் வைத்துள்ளனர்.
போலீஸ் கூறும் காரணம் 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில் போராட்டம் நடத்தினார்கள் என்பதுதான். சாதாரணமாக ஒரு வீதியில் வசிக்கும் மக்கள், அதுவும் ஏழை விசைத்தறி தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் டாஸ்மாக் திறந்தால் ஆண்களின் குடியால் மேலும் மேலும் வறுமையும், கடன் சுமையும் ஏறுமே என்ற வேதனையில், அரசுக்கு வேண்டுகோள் வைப்பது போல் அட்டையில் எழுதி காட்டி அதை வாட்ஸ்அப்பில் பதிவிட்டது அவர்களை கைது செய்யும் அளவுக்கு அவ்வளவு பெரிய சமூக குற்றமா? சட்ட விரோதமா...? டாஸ்மாக் மீது ஈடுபாடு என்பது அரசுக்கு மட்டுமல்ல... நமது காவல்துறைக்கும் தான்.