Skip to main content

பீடி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

erode district employees, manufacturing owners union government

 

இன்று (19/02/2021) ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே ஈரோடு மாவட்ட பீடி, சுருட்டுத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

அதில், "மத்திய அரசு, புதிதாகக் கொண்டு வரவுள்ள புகையிலை விற்பனையை முறைப்படுத்தும் சட்டத்தை அமலாக்குவதற்கு முன்பாக, அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் பீடி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களை உள்ளடக்கிய தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். வேலை வாய்ப்பு இழந்துள்ள பீடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, மாற்று வேலையை அரசுதான் உருவாக்க வேண்டும். வேலை இழப்புக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். பீடித் தொழிலாளர்களின் சேம நலத் திட்டங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி வருவாயில் இருந்து போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து சேம நலத் திட்டங்களான கல்வி, மருத்துவம், திருமணம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களையும் வழங்க வேண்டும். அனைத்துப் பீடி தொழிலாளர்களையும் பி.எஃப். திட்டத்தில் இணைத்து முழுமையான சலுகைகளையும் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் பீடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் தொகையாக மாதம் ரூபாய் 6,000 வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பீடி தொழிலாளர் சங்கத் தலைவர் கைபானி தலைமை தாங்க, பொதுச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரின் உத்தரவு; ஆய்வுக்குப் பிறகு 59 கடைகளுக்கு சீல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
59 shops sealed for selling banned tobacco products in Erode

முதல் - அமைச்சர் உத்தரவின்படி உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, வருவாய் துறை, மாநகராட்சி நிர்வாகம், போலீசார், பொதுப்பணித்துறை ஆகியோர் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் பள்ளி கல்லூரி அருகிலும், கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கலெக்டர் உத்தரவின்படி கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் குழு ஆய்வு மேற்கொண்டதில் 59 கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 59 கடைகளுக்கும்  சீல் வைக்கப்பட்டு ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசின் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை, சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையினர் கொண்ட குழுவினர் முன்னிலையில்  வெண்டிபாளையம் மாநகராட்சி உரக்கடங்கில் அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 956 ஆகும். பொதுமக்கள் உணவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.