Skip to main content

பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய ஈரோடு சங்கம்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

தை ஒன்று தமிழர் திருநாள் தைப்பொங்கல்... தமிழர்களின் பாரம்பரிய விழாவாக தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு மனிதகுலத்திற்கு ஆபத்தாக பரவிய கரோனா வைரஸ் தொற்றும், அதனால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கமும் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இப்போது வரை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

 

இந்நிலையில் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற தமிழர்களின் கூற்றுப்படி, இந்த தை பொங்கல் திருவிழா மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி இருப்பினும் தை பொங்கலுக்காக தங்கள் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப புத்தாடைகள், பொங்கல் பொருட்கள், கரும்பு என தேவையான பொருட்களை வாங்கி உற்சாகத்துடன் தை பொங்கலை வரவேற்கிறார்கள் மக்கள். இதில் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் பத்திரிகையாளர் குடும்பத்திற்காக ஒரு சிறப்பான செயலை செய்துள்ளது.

 

மாவட்டத்தில் உள்ள சில நல்ல மனிதர்களின் உதவியோடு, ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நல சங்க உறுப்பினர்கள் குடும்பத்திற்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 13.1.2021 புதன்கிழமை காலை 12 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ஜீவாதங்கவேல், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை ஈரோடு நகர காவல்துறை துணை கண்கானிப்பாளர் ராஜீ மற்றும் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினார்கள்.

 

மாவட்டம் முழுவதும் இச்சங்கத்தில் உறுப்பினராக உள்ள 160 பேர்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் வேட்டி, சட்டை, சேலை, பொங்கல் வைக்க தேவையான பொருட்கள், சில உணவு பொருட்கள் என ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மதிப்பில்  25 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது.

 

"ஏற்கனவே கரோனா காலகட்டத்தில் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூபாய் தலா இரண்டாயிரம், ஒரு சிப்பம் அரிசி, மளிகை பொருட்கள் என மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வழங்கி ஒரு முன்னோடியாக பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு நம்பிக்கையை கொடுத்தது ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம். அதேபோல் தற்போது தை பொங்கலை குடும்பத்தோடு மகிழ்வுடன் கொண்டாட பொங்கல் பொருட்கள் வழங்கி சிறப்பான சேவையும், பிற மாவட்ட பத்திரிகையாளர் சங்கங்களுக்கு வழிகாட்டுதலாகவும் இச்சங்கத்தின் செயல்பாடு அமைந்துள்ளது. 'மகிழ்வித்து மகிழ்' என்பதற்கு நீங்களே உதாரணம் என காவல்துறை அதிகாரிகள் பாராட்டினார்கள்.

 

ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தி பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்குவது வழக்கம் அது போலவே இவ்வருடம் நடந்தது என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் சங்க துணை தலைவர்கள் சுப்பிரமணியம், மூர்த்தி, துணைசெயலாளர்கள் ஜோசப்இன்பராஜா, நவீன் மற்றும் நிர்வாகிகளோடு ஈரோடு, பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அரச்சலூர் என மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.