தமிழக சுகாதாரத்துறை துரிதமாக செயல்பட்டு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் உயிரிழப்பும் ஏற்பட தொடங்கியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு தமிழக அரசும், சுகாதாரத் துறையும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டதால்தான் காய்ச்சல் வேகமாக பரவி பாதிப்பு அதிகமாக ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. கடந்த ஆண்டு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பலபேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை நாம் அறிவோம்.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் உயிரிழப்பு நிகழ்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக சுகாதாரத் துறை செயல்பட்டிருந்தால் டெங்கு காய்ச்சல் பரவுவதை ஓரளவு கட்டுப்படுத்தி உயிரிழப்பை தடுத்திருக்க முடியும். தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாமல் காலியாக இருப்பதினால் எந்தவொரு பணியையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தமிழக அரசால் துரிதமாக செய்ய முடியவில்லை. மாநகராட்சி முதல் ஊராட்சி வரை அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் மற்றும் சாக்கடைகளை சரிவர சுத்தம் செய்யாமல் மாதக்கணக்கில் அப்படியே கிடப்பதினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தின் சுகாதாரம் கேள்விக்குறியாகி டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு தமிழக மக்கள் இரையாகும் சூழ்நிலையை தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசு உருவாக்கி தந்திருக்கிறது. வீட்டை விட்டு வெளியே போனாலே டெங்கு வந்துவிடுமோ என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. எனவே தமிழக அரசும், தமிழக சுகாதாரத் துறையும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தி உயிரிழப்பை தடுக்க முன்வர வேண்டும்." என கூறியிருக்கிறார்.