Skip to main content

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி கைது!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 Enforcement officer incident in Dindigul

 

திண்டுக்கல்லில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாகக் கூறி திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி அங்கிட் திவாரி என்பவர் 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.

 

இது குறித்து மருத்துவர் ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் தகவலறிந்து அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார், அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் காரிலிருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி அவரையும் கைது செய்தனர். பின்னர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து சுமார் 6 மணி நேரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது ஏலச் சீட்டு மோசடி விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யாமல் இருக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் ரூ. 15 லட்சம்தான் கொடுக்க முடியும் என்று குற்றவாளி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் பணத்தை வாங்கியபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேரையும் கையும் களவுமாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவமும் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரட்டை இலைச் சின்னத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
A new case in the High Court against the double leaf symbol

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கக் கூடாது என, தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சம்பந்தமான சட்ட திட்டங்களுக்கு விரோதமாகச் செயல்பட்டது தொடர்பாகவும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்.

அதிலும் குறிப்பாக வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளேன். இருப்பினும் தான் அளித்துள்ள மனுவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதன் காரணமாக கட்சி தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

'செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு'-அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
'Senthil Balaji's Bail Petition'-Judge Anand Venkatesh ruled

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

மேலும், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு கடந்த (16.02.2024) தேதி குறிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ‘செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்’ என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அப்போது இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை, அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான செந்தில் பாலாஜியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டு பதிவைத் தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.