Skip to main content

ஆக்கிரமிப்புகள் அகற்றம்; எச்சரிக்கை விடுத்த ஆர்டிஓ

Published on 11/05/2023 | Edited on 11/05/2023
encroachment constructed building destroyed karur kulithalai bus stand

 

பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் ஆர்டிஓ முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டன.

 

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நகர பேருந்து நிலையம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. இந்த இடத்திற்கு நகராட்சி நிர்வாகம் தரை வாடகை கொடுத்து நடத்தி வருகிறது. இந்த பேருந்து நிலையம் 1.22 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் போட்டி போட்டுக் கொண்டு உருவெடுத்தன. இதனால் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

 

இதனால் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்காக அரசு  74  லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து 1.22 ஏக்கர் நிலத்தை பல கட்டங்களாக அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தை சுற்றி ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிக அளவில் உள்ளதால் விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள்  முடிவு செய்தனர்.

 

பல கட்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், குளித்தலை ஆர்டிஓ புஷ்பா தேவி தலைமையில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, நகராட்சி ஆணையர் மனோகர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, நகராட்சி ஆகியவை இணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து  கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடங்கள் முதல் சிறிய வீடுகள் வரை உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் இடித்து தரைமட்டமாக்கினர்.

 

அப்பொழுது பொதுமக்களுக்கு ஆர்டிஓ புஷ்பா தேவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பல முறை எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் சட்டப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக ஏதாவது பிரச்சனையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்