Skip to main content

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி; சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பத்தினர்

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

Employee passed away in Cuddalore electrocution

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் நாராயணசாமி(40). இவர் ஊத்தாங்கால் மின்சார வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பொன்னாலகரத்தில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது. பழுது நீக்கம் செய்வதற்காக 12.30 மணியளவில் மின்வாரிய ஊழியர்கள் நாராயணசாமியை அழைத்துச் சென்றுள்ளனர். மின்மாற்றியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி நாராயணசாமி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத்  தெரிவித்தனர். இதையடுத்து நாராயணசாமி உறவினர்கள் இறந்தவரின் குடும்பத்திற்கு 50 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, விருத்தாசலம் - கடலூர் சாலையில், நேற்று ஊத்தாங்கால் மின்வாரிய அலுவலகம் முன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஊ.மங்கலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அதையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக சாலை மறியலை கைவிட்டு மின்வாரிய அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பின்னர் விருத்தாசலம் வட்டாட்சியர் ஆரோக்கியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிருந்தா, சாகுல் ஹமீது ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைய மாட்டோம் என மீண்டும் விருத்தாசலம்- கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் லூர்து சாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இழப்பீடு கிடைக்கவும், உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய மரணம்; மேலும் 6 பேர் கைது

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
counterfeiting liquor; 6 more arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாபுரம் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பென்சிலால், சடையின், ரவி, செந்தில், ஏழுமலை, கவுதம் லால் ஜெயின் ஆகிய ஆறு பேரை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

முன்னாள் திமுக அமைச்சர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை; போலீசார் விசாரணை

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
 Rs 50,000 stolen after breaking the lock of former minister's house; Police investigation

திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஈரோடு மாணிக்கம்பாளையம் விஐபி நகரில் ஒரு வீடு உள்ளது. இதேபோல் மொடக்குறிச்சி அருகே சின்னம்மாபுரம் கிராமம் மினிகாடு என்ற இடத்தில் 25 ஏக்கரில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதையடுத்து திமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திமுகவை விட்டு விலகினார்.

தற்போது எந்த ஒரு இயக்கத்திலும் சேராமல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுப்புலட்சுமி ஜெகதீசன் வாரத்தில் இரண்டு நாட்கள் குடும்பத்துடன் இந்தப் பண்ணை வீட்டில் தங்குவது வழக்கம். சின்னம்மாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தோட்டத்தை கவனித்து வருகிறார். தோட்டத்தில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜ் வழக்கம்போல் பண்ணை வீட்டைப் பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வரும் நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த சந்திரசேகர் அந்த வழியாக சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 Rs 50,000 stolen after breaking the lock of former minister's house; Police investigation

இதுகுறித்து சுப்புலட்சுமி ஜெகதீசன் கணவர் ஜெகதீசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மலையம்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெகதீசன் மற்றும் போலீசார் வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீட்டில் டேபிள் டிராயரில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. அந்தப் பணம் தோட்டத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருப்பது என தெரிய வந்தது. வீட்டில் வேறு பெரிய அளவில் பணம், நகைகள் வைக்கவில்லை. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாததால் கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.