Skip to main content

கோவை அருகே வீட்டுக்குள் புகுந்து அரிசி மூட்டைகளை தின்ற ஒற்றை யானையால் பரபரப்பு

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
Elephant



கோவை மாவட்டம் மாங்கரை, தடாகம், தாளியூர் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களாகும். இங்கு காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைவதும், விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. 
 

அவ்வாறு நுழையும் காட்டு யானைகளால் தொந்தரவு ஏற்படுவதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
 

இந்நிலையில் தடாகம் அடுத்த தாளியூர் கிராமத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானை விவசாய சங்க நிர்வாகி நடராஜன் என்பவரது வீட்டிற்குள் நுழைய முயன்றது. அங்கு வீட்டின் முன்பு வராண்டாவில் இருந்த அரிசி மூட்டைகளை தள்ளி அதில் இருந்த அரிசி மற்றும் யூரியாவை தின்றது.
 

யானை வீட்டிற்குள் நுழைந்த போது வீட்டில் குழந்தைகள் பெண்கள் இருந்ததால் அச்சத்தில் ஆழ்ந்தனர். மேலும் அவர்கள் அந்த யானையை திருப்பி போக சொல்லியும் குரல் எழுப்பினர். இருப்பினும் கொஞ்ச நேரம் அரிசியை சாப்பிட்ட யானை, பின்னர் அங்கிருந்து சென்றது.
 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த யானையால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், இருந்தாலும் வீடுகளில் யானை நுழைவதால் மக்கள் அச்சப்படுவதாக தெரிவித்தனர். மேலும் இதுபோன்று சில யானைகள் தொடர்ச்சியாக வீட்டிற்குள் புகுவதால் அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

 


 

சார்ந்த செய்திகள்