Skip to main content

வீட்டு மின் இணைப்புகளுக்கான மின் கட்டணங்கள்; தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

Electricity charges for household electrical connections; Tamil Nadu Government New Notification

 

வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்தகால ஆட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மேலும், மத்திய அரசின் ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும். இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2022-23 முதல் 2026- 27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் (MYT) வழங்கியது. மேற்படி உத்தரவில் 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது.

 

அதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6%, இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்தவரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த மாண்புமிகு முதலமைச்சர், மாண்பமை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

 

இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறு ஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7%லிருந்து 2.18% ஆக குறைக்கப்பட்டது. இந்த குறைந்த உயர்விலிருந்தும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18% உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

 

இந்த முடிவால்,

அ) வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது. 

ஆ) வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம். கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

(இ) வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

 

இந்த ஆண்டு நமது நாட்டின் பிற மாநிலங்களில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும் போது மகாராஷ்டிரா (62 பைசா/யூனிட்), கர்நாடகா(70 பைசா/யூனிட்), அரியானா (72 பைசா/யூனிட்), மத்தியப் பிரதேசம் (33 பைசா/யூனிட்), பீகார் (147பைசா/யூனிட்) - தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின்கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2026 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பேன்” - சரத்குமார்

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Sarathkumar has said that he will take office as the CM of Tamil Nadu in 2026

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வெற்றி பெற்றும் தமிழகத்தின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்பேன் எனறு சரத்குமார் தெரிவித்துள்ளார். 

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நேற்று நெல்லையில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய அவர், “56 ஆண்டுகள் இரு திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்துவிட்டனர். அண்மையில் வந்த சில தலைவர்கள் இவர்களை குறை செல்ல வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஆனால் குறை செல்லவேண்டாம் என்றாலும் அது நிறைவாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இன்று வெள்ள நீர் வடியாதது குறித்து மறியல் போராட்டங்கள் முற்றுகை எல்லாம் செய்துகொண்டிருக்கும் மக்கள், தேர்தல் வந்தவுடன் அவர்களுக்குத்தான் மீண்டும் வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்கிறார்கள்; அதற்கு காரணம் எல்லாம் பணம். ஜனநாயகம் போய் எல்லாம் பணநாயகமாகிவிட்டது. அதனை எல்லாம் மாற்றவேண்டும். உங்களால் முடியுமா என்று என்னை பார்த்து கேட்டால் நிச்சயம் எங்களால் முடியும் என்று நான் கூறுவேன்.

நான் ஒரு அமைதியான ஆறு; ஓடுவதும் தெரியாது, ஆழமும் புரியாது. ஆனால் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாங்கள் நிற்கும் போது எங்களின் வேகமும், ஆழமும் புரியும். தமிழகத்தில் 1954 முதல் 1963 வரை பொற்கால ஆட்சியை கொடுத்தவர் காமராஜர். அப்பழுக்கற்றவர் காமராஜர். 1967 ஆம் ஆண்டு காமராஜர் தோற்றுவிட்டார் என்று சரித்திரம் சொல்கிறது; ஆனால் அவர் தோற்கவில்லை தமிழகம் தான் தோற்றது.  தமிழக அரசியல்தான் தோற்றது என்று எழுத வேண்டுமே தவிர, ஒருபோதும் காமராஜர் தோற்கவில்லை. 

அதன்பிறகு தமிழகத்தை மாறி மாறி திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றனர். மாறி மாறி இலவசங்களை கொடுத்து கொடுத்து மக்களை கெடுத்து வைத்திருக்கின்றனர். தற்போது குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களது கணவன் வேலையில்லாமல் டாஸ்மாக்கிற்கு மட்டும் போயிட்டு வந்து நிம்மதியாக படுத்து தூங்குகிறார்கள். இதேபோன்று அரிசி, லாப்டாப், சைக்கில் போன்று அனைத்தையும் இலவசமாக கொடுத்துவிடுகிறீர்கள். அப்புறம் எப்படி அவர்கள் வேலைக்கு செல்வார்கள்? டாஸ்மாக்கிற்குத்தான் போவார்கள். இதையெல்லாம் சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மாற்றுவோம்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தங்களது இலக்கு அல்ல; 2026 ஆம் அண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வராக பதவியேற்பேன். திராவிட இயக்கங்கள் தொடர்ந்தால் இன்னும் 10, 20 ஆண்டுகளின் நாம் வாக்களித்து அவர்கள் வெற்றிபெறவேண்டிய நிலை மாறி வட இந்தியர்கள் மட்டும் வாக்களித்து திராவிட இயக்கங்கள் வெற்றி பெறும் நிலைமை உருவாகிவிடும். எல்லாரும் எல்லா மாநிலத்திற்கும் செல்லலாம்; ஆனால் அந்ததந்த மாநிலத்தின் மக்களுக்குத்தான் முதலில் வேலை கிடைக்க வேண்டும்” என்றார். 

Next Story

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை!

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Heavy rain in 16 districts of Tamil Nadu today

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். அதே சமயம் வடசென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாத நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் 12 செ.மீ மழை பொழிந்துள்ளது. குண்டேரிப்பள்ளம், பந்தலூரில் தலா 10 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.