Skip to main content

மின் ஊழியர்களின் வேலை நிறுத்தம்! சாலை நடுவே நின்ற தேர்! 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

Electrical workers strike! Chariot standing in the middle of the road!

 

சிவகாசி என்ற பெயர் அமைந்ததற்கான காரணம், அங்குள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில்தான். சிவன் காசியில் இருந்து எழுந்தருளியதாலேயே, சிவகாசி எனப் பெயர் வந்தது.

 

தொழிலில் மட்டுமல்ல, ஆன்மிக அர்ப்பணிப்பிலும் சிறந்து விளங்கும் சிவகாசியில், தற்போது ஆடித்தபசு திருவிழா நடந்து வருகிறது. இன்று (8-8-2022) 9-ஆம் நாள் திருவிழாவாகும். மண்டகப்படிதாரரான வடநாட்டவர் நிறுவனமான தர்கர்ஜி சிவா டிரேடர்ஸ் சார்பில் அபிஷேகமும், சட்டத் தேரோட்டமும் நடந்தது.  சிவகாசி ரதவீதிகளில் அன்ன வாகனத்தில் அம்பாள் தேர் வலம் வந்தபோது, தெற்கு ரதவீதியில் நகரமுடியாமல் நின்றுவிட்டது. காரணம், சாலையில் குறுக்கிடும் கேபிளைக் கழற்றிவிட்டு, அந்த ரதவீதியில் சட்டத்தேர் செல்வதற்கு வசதி பண்ணித்தர மின்வாரிய ஊழியர்கள் வராததுதான். 

 

மின்சார சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யும் நாளான 8-ஆம் தேதி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், சாலையில் குறுக்கிடும் கேபிளைக் கழற்றிவிட வரவில்லை. அதனால்,  சட்டத்தேர் சாலையின் நடுவே நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட நேரிட்டது. சூழ்நிலையைத் தாமதமாக உணர்ந்து, மின் ஊழியர்களை வரவழைத்து, கேபிளைக் கழற்றிவிடச் செய்து, சட்டத்தேரை அந்த இடத்திலிருந்து நகர்த்தி கோவிலுக்கு கொண்டுபோய்ச் சேர்த்தனர். 

 

‘இன்றைக்கு மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்பதை அறிந்தும் சட்டத்தேரை ஏன் இழுத்தார்கள்? முதலிலேயே மின்சாரத்துறையிடம் முறைப்படி தெரிவித்திருக்க வேண்டுமல்லவா? சட்டத்தேரை இழுப்பதற்கு முன்பே மின் ஊழியர் ஒருவரைத் தயாராக வைத்திருக்கவில்லையே? வீதிகளில் வலம் வரும் கோவில் தேர்களால் அங்கங்கே அசம்பாவிதம் ஏற்பட்டு வருவதைக் கவனத்தில்கொண்டு, மின் இணைப்பைத் தேரை இழுப்பதற்கு முன்பே துண்டிக்காதது ஏன்?’ எனச்  சிவகாசி பொதுமக்களின் கேள்விகள் வரிசைகட்டி நிற்க, விஸ்வநாதசுவாமி கோவில் செயல் அலுவலர் சத்தியசீலனைத் தொடர்புகொண்டோம். 

 

அவரது கைப்பேசி எண் தொடர்ந்து ஸ்விட்ஸ்-ஆப் நிலையிலேயே இருந்தது. அதனால், கோவில் அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம்.  “மின்வாரிய அலுவலர்களான உதவி செயற்பொறியாளருக்கும், உதவிப் பொறியாளருக்கும் முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம். திடீரென்று பணிநிறுத்தம் அறிவித்துவிட்டதால் மின் ஊழியர்களை அனுப்பமுடியவில்லை என்று காரணம் சொன்னார்கள்.” என்றனர். ‘மின் ஊழியர்கள் வராத நிலையில் தேரை இழுத்தது தவறல்லவா?’ என்ற நமது கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.