Skip to main content

பிரச்சாரத்தின் போது வீட்டில் டீ அருந்திய முதல்வர்!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

election campaign cm palanisamy namakkal drink tea, ministers also

நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராசிபுரம், பாப்பிநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். 

 

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது; "நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம். பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாட ரூபாய் 2,500 வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறியது பொய் குற்றச்சாட்டு. ஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மக்கள் கொடுத்த பதவிதான் முதல்வர் பதவி; நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல" என்றார். 

 

அதைத் தொடர்ந்து, வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கியும், அ.தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியும்   முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்தார். முதலைப்பட்டியில் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணியுடன் பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் விவேக் என்பவரின் வீட்டில் டீ அருந்தினார். அவர்களுடன் சிறிது நேரம் பேசியவர், அதன் பிறகு மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்கினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.