Skip to main content

பிச்சை எடுத்தவர்களுக்கு முதியோர் உதவித் தொகையும், சிகிச்சையும் வழங்க உத்தரவிட்ட  ஆட்சியர்...

Published on 01/06/2020 | Edited on 01/06/2020


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மாவட்டம் முழுவதும் எழும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். 

கரோனா தொடங்கிய நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதை அறிந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டது. 
 


கொத்தமங்கலத்தில் 95 வயது முதியவர் தள்ளாத வயதிலும் பனைமரம் ஏறி நூங்கு வெட்டி இறக்கி விற்பனை செய்து வருகிறார். அவருக்கு மாதாந்திர முதயோர் உதவித் தொகை கிடைக்க நடவடக்கை எடுக்க மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் மூலம் கோரிக்கை வைத்தோம். அடுத்த நாளே அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வட்டாட்சியரின் காரில் அழைத்து வரச் செய்து உதவித் தொகைக்கான உத்தரவை முதியவருக்கு வழங்கினார். இப்படி ஏழைகளின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுக்கோட்டை நகரில் ஒரு விழாவிற்குச் சென்றவர் விழா தொடங்க சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டதால் எதிரில் உள்ள திரு இருதய ஆண்டவர் தேவாலய வளாகத்திற்குள் சென்றார். அப்போது தேவாலய நுழைவாயிலில் 6 முதியவர்கள், மற்றும் மூதாட்டிகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களிடம் விசாரித்தவர், அவர்களிடம் உங்களுக்கு முதியோர் உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதனால் இனிமேல் பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறியதுடன் அருகில் நின்ற அதிகாரிகளிடம் உடனே உதவித் தொகை கிடைக்க ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். 
 

 


அப்போது ஒரு மூதாட்டி எழுந்து நிற்க முடியாமல் உடல் நலமின்றி அமர்ந்திருப்பதைப் பார்த்து விசாரித்த ஆட்சியர் உமாமகேஸ்வரி, உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். ஆட்சியரின் இந்த உத்தரவுகளைப் பார்த்து நெகிழ்ந்த முதியவர்கள் கண்கள் கலங்க கைகூப்பி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கூறினார்கள். கூடியிருந்த மக்களும் மாவட்ட ஆட்சியரை நன்றியோடு பார்த்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'வதந்திகளை நம்ப வேண்டாம்'-துரை வைகோ அறிவுறுத்தல்

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
 'Don't believe rumours'-Durai Vaiko advises

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து துரை வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், 'மதிமுக இயக்கத் தந்தை தலைவர் வைகோ நலம் பெறுவார்; மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேலின் மகள் மண விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள். அப்பொழுது எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல்நலம் பெறுவார்கள்; வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் பலரும் வைகோ உடல்நலம் பெற வேண்டும் என விருப்பத்தை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசி வாயிலாக துரை வைகோவை அழைத்து வைகோவின் உடல்நலம்குறித்து நலம் விசாரித்தார்.

இந்தநிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நலம் குறித்து உலவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என துரை வைகோ தெரிவித்துள்ளார். 'எலும்பு முறிவால் ஏற்படும் வலி மட்டுமே உள்ளது. வழக்கமான உணவை உண்ணுகிறார். அவருக்கு பிடித்தமான டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சிகளில் பார்க்கிறார். விரைவில் வைகோ பூரண நலம் பெற்று வீடு திரும்பியதும் தொண்டர்களை சந்திப்பார். அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.