Skip to main content

விரத காலத்திலும் அதிகரித்துள்ள முட்டை விலை; பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி!

Published on 05/12/2024 | Edited on 05/12/2024
Egg prices have increased even during the fasting period

விரத காலங்களிலும்  இதுவரையில்லாத வகையில், முட்டை விலைகள் ரூ. 7 என கடுமையாக அதிகரித்திருப்பது பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆண்டுதோறும் ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் விரத காலங்களாக கடைபிடிக்கப்படுகின்றன. ஆவணி மாதத்தில் சிவ வழிபாடு செய்வோரும், புரட்டாசியில் பெருமாளை வழிபடுவோரும், கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் இருதரப்பினரும் விரதங்களை மேற்கொள்ளும் மாதங்களாகும். குறிப்பாக கார்த்திகை மாதம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து பெரும்பான்மையானோர் விரதம் மேற்கொள்ளும் காலமாகும். எனவே இக்காலங்களில் இறைச்சி, முட்டைகள், மீன் உள்ளிட்டவற்றின் விலைகள் கட்டுப்பாட்டுடன் காணப்படுவது வழக்கம்.

ஆனால் இதுவரையில்லாத வகையில், இந்தாண்டு கறிக்கோழி விலைகூட சற்று குறைந்துள்ள நிலையில், மீன், முட்டைகளின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பது பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த ஆண்டு ஆவணி மாதம் தொடங்கி புரட்டாசி முடியும் வரையில் முட்டை விலைகள் கொள்முதல் விலை ரூ.4.50 முதல் 5 வரையிலும், சில்லரை விலை ரூ. 6 என்ற வகையிலும் இருந்தது, குறையவே இல்லை. ஐப்பசி மாதத்தில் வழக்கம்போலவே உயர்ந்துதான் இருந்தது. கார்த்திகை மாதம் தொடக்கத்தில் (நவம்பர் 15க்கு பிறகு) ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணியும் காலம் என்பதால் கண்டிப்பாக முட்டை விலைகள் குறையும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால்  எப்போதும் இல்லாத வகையில் கொள்முதல் விலையே ரூ. 5.50 முதல் ரூ.6 ஆகியுள்ளது. விலையேற்றம் குறித்து  பொதுமக்களின் கேள்விகளுக்கு காரணம் தெரியாமல், வியாபாரிகள் விழிபிதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சியைச் சேர்ந்த இறைச்சி மற்றும் முட்டை வியாபாரி  பாலு கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இறைச்சி மற்றும் முட்டை விலைகளும் அதிகரித்திருப்பது மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.குறிப்பாக முட்டை விலை அதிகரிப்புதான் எப்போதும் இல்லாத வகையில் உள்ளது. அண்மைக்காலமாக கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 10 முறை முட்டை விலைகள் அதிகரித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. பொதுவாக கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு விரதம் இருப்பவர்கள் அதிகமாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் அசைவ பிரியர்கள் விலை மலிவாக இறைச்சி, மீன், முட்டைகளை வாங்கி உட்கொள்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு கறிக்கோழி விலைகள் கூட கார்த்திகை மாதத்தில் கிலோ ரூ. 250லிருந்து ரூ,.175 ஆக குறைந்துள்ளது. ஆனால் முட்டை விலைகள்தான் ராக்கெட் வேகத்தில் உள்ளது.

இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் கூற இயலவில்லை. பெரும்பாலும் நாமக்கல் மாவட்டத்திலிருந்துதான் திருச்சி மண்டல பகுதிகளுக்கு முட்டைகள் வருகின்றன. எனவே அங்குள்ள முட்டை உற்பத்தியாளர்கள்தான் முட்டை விலைகளை நிர்ணயிக்கின்றனர். விலையேற்றம் குறித்து கேட்டால், சத்துணவுக்கு முட்டை வழங்குவது, சிறைகளுக்கு முட்டை வழங்குவது வடமாநிலங்களுக்கு முட்டை அனுப்புவது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்” என்றார்.

திருச்சி விமான நிலையம் அம்பிகை நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஏ. வீரையா இதுகுறித்து கூறுகையில், “ஆவணி மாதம் ஒரு முட்டை விலை ரூ. 5 ஆக இருந்தது. பின்னர் புரட்டாசியிலும் விலை குறையாமல் ரூ. 6 ஆக இருந்தது. ஆனால் தற்போது கார்த்திகை பிறந்த நிலையிலும் முட்டை விலை ரூ. 7 ஆக உயர்ந்துள்ளது. முட்டை விலை இந்தளவுக்கு, அதாவது இரு மாதங்களில் ரூ. 2 உயர்ந்திருப்பது இப்போதுதான். பைசாக்களிலிருந்து முட்டை விலை உயர்வு தற்போது ரூபாய்களாகியிருப்பது அதிர்சியை அளிக்கிறது.  ஆட்டிறைச்சி, மீன் இவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.  சாமானிய மக்கள் மற்றும் ஏழை எளியோரின் அசைவ உணவு வகைகளில் (போந்தா) கோழி இறைச்சி மற்றும் அவற்றின் முட்டைகள்தான் முக்கிய இடம் பிடித்திருந்தன. தற்போது அவையும் அதிகரித்திருப்பது, குறிப்பாக கார்த்திகை மாதத்தில் அதிகரித்திருப்பதன் மர்மம் புரியவில்லை” என்றார்.

சார்ந்த செய்திகள்