Edappadi Palaniswami condemns Karnataka Congress government!

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisment

தமிழகத்திற்குத்தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி வீதம் ஜூலை 31 வரை தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் எண்ணங்களை கருத்திற்கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை கர்நாடக அரசு ஏற்காமல் முரண்டு பிடிப்பது ஏற்கத்தக்கதல்ல.

விளம்பர போட்டோ ஷூட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக முதல்வர், காங்கிரசின் தயவிற்காக தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது அவரின் தொடர் செயலற்றத்தன்மை மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேடையில் மட்டும் மாநில உரிமை பற்றி வாய் கிழிய பேசும் திமுக அரசின் முதல்வர் தன்னுடைய செயலற்ற தன்மையால், தமிழக மக்களின் வாழ்வோடு விளையாடி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

Advertisment

டெல்டா விவசாயிகள் நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக காவிரி விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெறுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.