
ஆம்பூர் ஓணாங்குட்டை பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் சிலர் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த அந்த வேன் இன்று விடியற்காலை பழுதாகியது. இதனால் வேனில் பயணித்தவர்கள் அதிலிருந்து இறங்கி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் தடுப்பில் அமர்ந்திருந்தனர். அப்பொழுது வேனின் பின்பக்கத்தில் லாரி ஒன்று வந்து மோதியது. மோதிய வேகத்தில் வேன் கவிழ்ந்துள்ளது. இதில் சாலையின் சென்டர் மீடியன் தடுப்பு மீது அமர்ந்திருந்த பெண்கள் மீது வேன் கவிழ்ந்தது.
இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.