Skip to main content

‘தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேறு..’ - காவிரி விவகாரத்தில் அமைச்சர் பதில்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
duraimurugan said Karnataka on Cauvery will be taken in consultation with cm stalin

வேலூரில் ஊரகப் பகுதிகளில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை காட்பாடி அடுத்த கிறிஸ்டியன்பேட்டை பகுதியில் உள்ள நிதியுதவி தொடக்கப்பள்ளியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். இதில் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 68 ஊரக அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் 1-5-ம் வகுப்புகளில் பயிலும் 1296-மாணவர்கள், 1244-மாணவிகள் மொத்தம் 2540 மாணவ மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், “தமிழகத்திற்கு அதிகமான தண்ணீர் தேவைப்பட்டாலும் அத்தியாவசிய தேவைக்காக ஒரு டிஎம்சி நீரை தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என காவேரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஒரு டிஎம்சி யை கூட தர மாட்டேன் என அடம்பிடித்தார்கள். நாங்கள் நிலைமைகளை விளக்கி நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினோம். அதன் பிறகும் அந்தப் போக்கில் இருந்து கர்நாடக அரசு மாறாமல் ஒரு டிஎம்சி வழங்க முடியாது என மறுத்துவிட்டு 8 ஆயிரம் கன அடி தருகிறோம் எனச் சொல்கிறார்கள்.

ஒரு டிஎம்சி என்பது 11 ஆயிரத்தி 574 கனஅடி ஆகும். கர்நாடகாவில் தண்ணீர் இருக்கிறது. கே.ஆர்.எஸ் ஆணையில் 105 ஆடி தண்ணீர் உள்ளது. கபினியில் 64 அடி தண்ணீர் உள்ளது. இது போன்று நமக்கு தண்ணீர் தரும் கர்நாடகாவில் உள்ள 4 அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. இதுவரை(15.07.2024)  4,047 கன அடி தான் மேட்டூருக்கு தண்ணீர் வந்துள்ளது. தற்போது அங்கு மழை பெய்து வருவதால் அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழகம் அடுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். இதில் கர்நாடக மேல்முறையீடு செய்தால் ரொம்ப நல்லது. அது நமக்கு தான் கை கொடுக்கும். மேலும் கர்நாடகா தண்ணீர் கொடுக்கிறோம் என சொன்னாலும், கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும் மழை அதிகமாக பெய்தால் தண்ணீர் வந்து தான் ஆகணும்” என்றார்.

இதையடுத்து, கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ஸ்டாலின் காவேரி விவகாரத்தில் தமிழக மக்களையும் தமிழக விவசாயிகளையும் பற்றி கவலைப்படாமல் உள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு, “ எடப்பாடி பழனிசாமிக்கு காவேரி விவகாரம் குறித்து அதிகமாக தெரியாது. அவர்கள் ஆட்சியில் மட்டும் கேட்ட உடனேயே தண்ணீர் வந்து விட்டதா?  கூட்டணி என்பது வேறு, அவர்களின் பிரச்சனை வேறு. தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வயிறு வேறு கர்நாடகாவிற்கு உள்ள உரிமையை அவர்கள் கேட்கிறார்கள். தமிழகத்திற்கு உள்ள உரிமையை நாம் கேட்கிறோம். நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும். இறுதி முடிவு உச்ச நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது. நான் மிக நீண்ட காலமாக காவேரி விவகாரத்தை கையாண்டு வருகிறேன் இதில் உள்ள எல்லா பிரச்சனை குறித்தும் எனக்கு தெரியும்” என்றார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுண்டரில் சந்தேகம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது குறித்து கேட்டதற்கு, “இன்வெஸ்டிகேஷனில் உள்ளது” என்றார்.

முன்னதாக அவர் பேசுகையில், “காமராஜர் படிக்காதவராக இருந்தாலும், ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுத்ததால் அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்த கலைஞர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தில் இரண்டு முட்டைகளை போட்டு சத்துணவாக மாற்றினார். அன்றைக்கு காமராஜர் பிள்ளைகள் படிக்க மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அன்றைக்கு காமராஜருக்கு ஏற்பட்ட ஞானோதயம் போல் இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்