Durai Vaiko demands construction of two tunnels Trichy - Ponmalai Railway

திருச்சி - பொன்மலை ரயில்வே குடியிருப்புப் பகுதி மக்களுக்கு இரண்டு சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். அதில், திருச்சி மாநகரம், பொன்மலைக் கோட்டம், மேலக்கல்கண்டார் கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, மாஜி இராணுவ காலனி, அம்பிகாபுரம், நாகம்மை வீதி, மூகாம்பிகை நகர், மகாலெட்சுமி நகர், மாருதி நகர், விவேகானந்தா நகர், ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே தொழிலாளர்கள், ரயில்வே ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

Advertisment

இதில், பொன்மலை ரயில்வே காலனி குடியிருப்பு காலியானதால், அங்கு ரயில்வே தொழிற்சாலைகள் அமைய இருக்கின்றது. அது வரவேற்கத் தகுந்தது தான். அதேநேரத்தில் அப்பகுதியில் இருந்த சுற்று வட்டாரப் பாதைகளை ரயில்வே நிர்வாகம் அடைத்துவிட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

Advertisment

ஆகவே, அப்பகுதி மக்கள் என்னிடம் அளித்த கோரிக்கை மனு அடிப்படையில் இன்று அப்பகுதி மக்களை நேரில் சந்தித்தேன். திமுக மற்றும் மதிமுக தொழிற்சங்க நிர்வாகிகளும் இந்தக் கோரிக்கையின் நியாயம் குறித்து என்னிடம் விளக்கினார்கள். மேலும், எங்களது தோழமை இயக்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நலசங்கம் சார்பிலும் வரும் 8-ம் தேதி இந்த கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிந்தேன். மக்களின் நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் அமைதி வழியில் போராடும் இந்தப் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திமுக ஆதரவு தரும். அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் பிரச்சனையில் ஈடுபடுவது நல்லது என்றும் அங்கு கூடியிருந்த மக்களிடம் தெரிவித்தேன்.

எனவே, பொன்மலை பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று அப்பகுதியில் இருசக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில், ரயில்வே நிர்வாகம் இரண்டு சுரங்கப் பாதைகள் அமைத்துத் தருமாறு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ரயில்வே நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கின்றேன்.

Advertisment

இந்த கோரிக்கை குறித்து தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன். உடனடியாக பொன்மலைப் பகுதி மக்களின் நியாயமான இந்தக் கோரிக்கையை நிறைவேற்றிடுமாறு வலியுறுத்துகின்றேன்”எனத் தெரிவித்துள்ளார்.