Skip to main content

"தி.மு.க. ஆட்சி வந்ததும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை"...- உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு...

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

dmk party udhayanidhi stalin election campaign at cuddalore district

"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சாரப் பயணத்திற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். மூன்றாவது நாளான நேற்று (23/12/2020) கடலூர் மேற்கு மாவட்டத்தில் நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் பிரச்சார பயணம் மேற்கொண்டார்.

 

நெய்வேலி தொ.மு.ச அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மூத்த நிர்வாகிகள் 10 பேருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அப்போது என்.எல்.சி. இரண்டாம் அனல் மின் நிலையத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த 21 தொழிலாளர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து தொழிலாளர்களுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.

dmk party udhayanidhi stalin election campaign at cuddalore district

பின்னர் விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய உதயநிதி, "கடந்த மாதம் கலைஞர் பிறந்த திருக்குவளையில் ஆரம்பித்த என் பிரச்சாரப் பயணம் 13 நாட்களாக தொடர்கிறது. இதில் நான் சந்திக்கும் மக்களைப் பார்க்கும்போது தி.மு.க.விற்குதான் எங்களது ஓட்டு என கூறி வருகின்றனர். இதனால் அடுத்த ஆட்சி நமது ஆட்சி தான். என்னை கைது செய்து பயமுறுத்தலாம் என இந்த அரசு நினைக்கிறது. நான் கலைஞரின் பேரன் யாருக்கும் பயப்பட மாட்டேன். இந்த அடிமை ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். ஒன்பதரை வருடம் ஆகிறது. ஏதாவது ஒரு சாதனையை சொல்ல முடியுமா? ஊழல், விலைவாசி ஏற்றம் இதுதான் இவர்களது சாதனையாக உள்ளது. பத்தாயிரம் கோடி ஊழலை ஆதாரத்துடன் தலைவர் கவர்னரிடம் கொடுத்துள்ளார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்படுவார்கள். அதனால் ஆட்சி மாற்றத்துக்கு இளைஞர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

 

வருகிற ஜனவரி 27- ஆம் தேதி சசிகலா வெளியே வருகிறார். ஜெயலலிதா இறந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. அவர் எப்படி இறந்தார் என யாருக்காவது தெரியுமா? ஒரு சாதாரண மனிதன் இறந்தால் கூட அவரது உறவினர்கள் அவர் எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? என விசாரித்து தெரிந்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முதல்வர் எப்படி இறந்தார் என யாருக்காவது தெரியுமா? அடுத்து தி.மு.க. ஆட்சி வந்ததும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை செய்து அதற்குரியவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கும் நம்மால்தான் தீர்வு காண முடியும்.

dmk party udhayanidhi stalin election campaign at cuddalore district

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வித் திட்டமான குலக்கல்வித் திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கிறது. இதனால் தமிழக மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் பின்தங்கிய நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலைகளில் 100 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும்.

 

வேளாண் திட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட அ.தி.மு.க. அரசு, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எந்த வித ஆதரவும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. தமிழக முதல்வர் பச்சை துண்டு போட்டு கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறார். நீட் தேர்வை தி.மு.க. எதிர்த்து வந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வை கொண்டு வந்து வருடத்திற்கு நான்கு பேர் என இதுவரை 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒன்று இல்லை என்றிருந்தால் அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 100% நீட் தேர்வு ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு 7000 கோடி கடன் தள்ளுபடி செய்தது, இலவச மின்சாரம் வழங்கியது, ரேஷன் அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கியது, இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது என பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க ஆட்சியில் தான். தலைவர் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வென்றெடுப்போம் என கூறுகிறார். அது அவரது தாராளத்தை கூறுகிறது. நான் சொல்கிறேன் 234 தொகுதிகளில் 234 தொகுதியையும் வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் கலைஞர்தான் வேட்பாளர் என நினைத்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டும்" என்றார்.

dmk party udhayanidhi stalin election campaign at cuddalore district

பிரச்சார பயணத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் முந்திரி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க.வின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்