Skip to main content

'காற்றில் ஊழல் செய்த ஒரே கட்சி திமுக' - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது. திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது கூட்டத்தில் பேசிய அவர், ''ஓட்டு போட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது தான் எங்களுடைய லட்சியம். உங்களைப் போல குடும்ப உறுப்பினர்களை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்து கொள்ளையடிக்க வைப்பது எங்களுக்கு லட்சியம் அல்ல.

எங்கள் கட்சியை பொறுத்தவரை ஜனநாயக கட்சி. மக்களுக்காகவே உழைக்க வேண்டும் என எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் எங்களுக்கு அற்புதமான பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். உங்கள் அப்பாவைப்போல் எல்லாம் எங்களது தலைவர்கள் கிடையாது. உங்கள் கட்சி ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அது கட்சி அல்ல. ஆனால் அதிமுக மக்களுக்காக நன்மை செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி. ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட கடைக்கோடியில் இருக்கக்கூடிய மக்களுக்கு கூட அதிமுக அரசுக்கு உதவுகின்ற மனப்பான்மையை இன்று வரை இருக்கிறது.

அண்ணா கண்ட கனவை நினைவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் எம்ஜிஆர் அண்ணா திமுக என்ற கட்சியை துவக்கினார். அன்றிலிருந்து இன்று வரை பல பொன்விழா கண்டிருக்கிறோம். யாராலும் இந்த கட்சியை அசைக்க முடியவில்லை. எவ்வளவு பிரச்சனைகள் இடையில் ஏற்பட்டது. கலைஞர் இருந்தபோதும் ஏற்பட்டது ஸ்டாலின் இருக்கும் பொழுதும் ஏற்பட்டது. இந்த கட்சியை உடைக்க வேண்டும்; செயல்படாது தடுக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகள் செய்தார்கள். அத்தனையும் இந்த மக்கள் துணையோடு தகர்த்து எறிந்த கட்சி அதிமுக.

சில எட்டப்பர்களும் இருந்தார்கள். இந்த சின்னத்தை முடக்கணும் என்று திமுகவோடு சேர்ந்து நமக்கு எவ்வளவு தொல்லைகளை கொடுத்தார்கள். ஆனால் திமுகவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காங்கிரஸ் மத்தியில் இருந்த பொழுது திமுகவினர் பலர் அமைச்சர்களாக இருந்தார்கள். அந்த நேரத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ஊழல் செய்து தமிழ்நாட்டை தலைகுனிய வைத்த கட்சி திமுக. கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்த ஒரே கட்சி திமுக. இந்தியாவிலே  ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் என்று சொன்னால் அது திமுக அரசாங்கம் ஒன்றுதான்'' என்று கடுமையாக சாடினார்.

சார்ந்த செய்திகள்