Skip to main content

'தன் வலக்கரம் இழந்தார் ஸ்டாலின்'- கவிஞர் வைரமுத்து ட்வீட்!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

DMK MLA ANBAZHAGAN KAVIGNER VAIRAMUTHU TWEET


கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (62 வயது) காலமானார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. ஜெ.அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 


அதன் தொடர்ச்சியாக ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெ.அன்பழகன் மறைவில் தன் வலக்கரம் இழந்தார் தலைவர் ஸ்டாலின். செயல் சிங்கத்தை இழந்தது இயக்கம்; உறுதிப்பொருள் உரைக்கும் உறுப்பினரை இழந்தது சட்டமன்றம்; என் நண்பரை இழந்தேன் நான்; மரணம் கொடிது; கரோனா மரணம் கொடிதினும் கொடிது. இயக்கத்தார்க்கும், இல்லத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கல்." என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவு” - திருமாவளவன் கண்டனம்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Thirumavalavan MP condemns the beaten kallakurichi student issues

“மனிதாபிமானமுள்ள, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது” எனப் பட்டியலின மாணவி மீது நடத்தப்பட்ட வன்கொடுமை தாக்குதலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநருங்குன்றம் கிராமம், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பை முடித்துள்ள மாணவி நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயிலும் கனவில் இருந்துள்ளார். அதற்காக அவர் வீட்டு வேலை செய்ய முடிவெடுத்து, திருவான்மியூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் முகவர் ஒருவர் மூலம் வீட்டுப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். வீட்டு உரிமையாளர் அன்டோ மதிவாணன் என்பவர் பல்லாவரம் தொகுதியைச் சார்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். அவரது மனைவி மெர்லின் என்பவர் தான், மாணவியை குரூரமாகக் கொடுமைப் படுத்தியுள்ளார் எனத் தெரிய வருகிறது.

வீட்டு வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே பல மாதங்களாக மாணவிக்கு சம்பளம் வழங்காமலும், அவரது குடும்பத்தினரைச் சந்திக்கவிடாமலும், ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை வாங்கியதுடன், மனிதாபிமானமற்ற முறையில் அடித்துத் துன்புறுத்திக் கொடூரமாக வதைத்துள்ளாரென்று தெரியவருகிறது. இது மனிதாபிமானமுள்ள, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஈவிரக்கமற்ற இச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரையடுத்து கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குள்ள குடும்பமெனினும், காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி, கணவனால் கைவிடப்பட்ட ஒரு தாயின் அரவணைப்பில் வளர்ந்து மருத்துவராகும் கனவுடன் உழைத்திட வீட்டுப் பணியில் சேர்ந்துள்ளார். உழைத்துச் சம்பாதித்துப் படிக்கத் துடிக்கும் ஒரு ஏழைச் சிறுமியை ஊக்கப்படுத்த வேண்டிய பக்குவம் இல்லாமல், நெஞ்சில் ஈரமின்றி இவ்வாறு கொடுமைப்படுத்தும் இவர்களின் கொடிய போக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கணவன் தனது மனைவியை அடிக்கவோ, பெற்றோர் தமது பிள்ளைகளை அடிக்கவோ, ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவோ கூடாது என்கிற 'மனித உரிமை' குறித்த விழிப்புணர்வு, உலகெங்கும் வளர்ந்துள்ள இக்காலச் சூழலில், இவர்களால் எப்படி இவ்வாறு நடந்து கொள்ளமுடிகிறது என்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. மாணவியை நள்ளிரவு வரை வேலை செய்யச்சொல்லி அடித்ததுடன், சாதியைச் சொல்லியும் இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் சொல்லி அந்த மாணவி கதறுவது நெஞ்சை உலுக்குகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களைக் கைது செய்வது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளில் அரசு உறுதியாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

பதினெட்டு வயதுக்கும் கீழாகவுள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் குற்றச் செயல்களைத் தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தழுவிய அளவில் இது குறித்து விரிவான புலனாய்வை மேற்கொள்ள நீதிபதி ஒருவரின் தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டுமெனவும் விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவிக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி அளிக்க வேண்டிய இழப்பீட்டை வழங்குவதுடன், அவருடைய மருத்துவக் கல்விக்கான கனவை நனவாக்கிட ஆவன செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியாள முடியுமா?” - கேள்வியெழுப்பும் கவிஞர் வைரமுத்து

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Vairamuthu question Tweet 

வட இந்தியாக்களில் தமிழர்கள் பயணிக்கும் போது இந்தி மொழி தான் தேசிய மொழி என்ற திணிப்பினை இராணுவத்தினர், காவல் அதிகாரிகள் போன்றவர்கள் நமக்கு சொல்வார்கள். அது தமிழர்களிடையே மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தும். இது அடிக்கடி நிகழும் சம்பவமாகும். சமீபத்தில் கோவா விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் இந்தி மொழிதான் தேசிய மொழி என தமிழ்நாட்டு பெண் ஒருவரிடம் வாதிட்ட சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது “இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா? இந்தியா என்ற நாடு இந்தி என்ற சொல்லடியில்தான் பிறந்ததா? எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழியென்ன இந்தியக் கரன்சியா? இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி கல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வடநாட்டுச் சகோதரர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்தால் தமிழ் தெரியுமா என்று தெள்ளு தமிழ் மக்கள் எள்ளியதுண்டா? சிறுநாடுகளும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சிமொழிகளால் இயங்கும்போது இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியாள முடியுமா? 22 பட்டியல் மொழிகளும் ஆட்சிமொழி ஆவதுதான் வினாத் தொடுத்த காவலர்க்கும் விடைசொன்ன தமிழச்சிக்குமான ஒரே தீர்வு” என்றிருக்கிறார்.