Skip to main content

திமுக பிரமுகர் மர்ம மரணம்! சாலை மறியல் செய்த பொதுமக்கள் 

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

DMK member passes away police investigation in puthukottai

 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகில் உள்ள வெள்ளாளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரவி (50). திமுக பிரமுகரான இவர், 19ம் தேதி இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் தேடிப் போன போது அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ரத்த காயங்களுடன் சடலமாக மிதந்துள்ளார். கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் வந்து சடலத்தை மீட்டனர்.

 

ரவியை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பமாட்டோம் என்று 3 மணி நேரம் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

DMK member passes away police investigation in puthukottai

 

தொடர்ந்து கறம்பக்குடி வந்த உறவினர்கள், ரவியின் நிலத்திற்கு அருகில் நிலம் வைத்துள்ள நபர்கள் ரவியின் நிலத்தை கேட்டு மிரட்டி தொல்லை கொடுத்துவந்தனர். இந்த நிலையில், ரவி சடலமாக கிணற்றில் கிடப்பதால் நிலம் கேட்டு தொல்லை கொடுத்தவர்களே ரவியை கொன்று கிணற்றில் வீசியிருக்கலாம். அதனால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுத்து கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 


சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடந்த நிலையில், அங்கு வந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு அந்த ஆய்வு முடிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு களைந்து சென்றனர். இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்