Skip to main content

சீன அதிபருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு!

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

தமிழகம் வரும் செஞ்சீன அதிபர் மேதகு ஜி ஜின்பிங் அவர்களை வருக, வருக என மனமார வரவேற்கிறோம்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை!
 

இந்தியத் திருநாட்டைப் போலவே, மிகப் பண்டைய பழம்பெருமையும், பண்பாடும் நாகரிகமும் கொண்டதும், மிக நீண்ட நிலப் பரப்பு கொண்டதும், உலகில் அதிக மக்கள் தொகை கொண்டதுமான சீன தேசத்தின் மேன்மைமிகு அதிபர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜி ஜின்பிங் அவர்கள் தமிழகம் வருவது அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவர்களை வருக வருக என்று மனமார வரவேற்கின்றேன்.
 

சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்திற்கு அவர் வருகை தருவது, இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. இருபதாம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் புரட்சிகளில் ஒன்று சீனப்புரட்சி. பொதுவுடைமைத் தத்துவத்தைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டு லட்சக் கணக்கான மக்களுடன் சீனப் பெருந் தலைவர் மாவோ அவர்கள் நடத்திய மகத்தான பேரணியை  அடுத்து,  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய புரட்சி, 1949 ஆம் ஆண்டு சீனத்தில் ஆட்சியைக் கைப்பற்றி, அதைச் செஞ்சீனமாக மாற்றி, உலகத்தையே திரும்பிப் பார்த்திட வைத்தது.

 DMK leader Stalin welcomes Chinese president


உழைக்கும் வர்க்கம் முன்னின்று தீரத்துடன் நடத்திய அந்த மாபெரும் புரட்சியின் எழுபதாம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தை, கடந்த அக்டோபர் 1ஆம் நாள் நடத்திவிட்டுத் தான் சீன அதிபர் அவர்கள் தமிழகம் வருகிறார்கள். அதே 1949 ஆம் ஆண்டுதான்,  தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற மாபெரும் சமூகப் புரட்சி இயக்கமும் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகமும் தனது 70வது ஆண்டு விழாவைப் போற்றிக் கொண்டு இருக்கிறது.
 

"ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என்று, மானுடத்திற்கு அரிய தத்துவத்தைத் தந்த  மாவீரர் மாவோ; முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் முத்தான தமிழில் ஏற்றிப் போற்றிப் பாராட்டிப் புகழப்பட்ட புரட்சி நாயகர் மாவோ; அவர் வழியில் புயலாக வீசிய அந்த சீனப்புரட்சிதான்,  அடுத்தடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் உருவான சமூக,  அரசியல்,பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. அத்தகைய தேசத்தின் அதிபர், தமிழகம் வருவது உண்மையில் பெருமைக்குரியதாகும்.
 

 DMK leader Stalin welcomes Chinese president



தமிழகத்துக்கும் சீனாவுக்குமான பண்பாட்டு உறவுகள், வணிகத் தொடர்புகள் இன்று நேற்று ஏற்பட்டது அல்ல; குடியரசு காலத்துக்கும் காலனிய காலத்துக்கும் முந்தைய மன்னராட்சிக் காலங்களில் இருந்து தொடர்கிறது. கி.மு.காலக்கட்டத்திலேயே சீன நாணயங்கள் இருந்த இடம், நம்முடைய தஞ்சை மண். சீன தேசத்துக்கு வர்த்தகம் செய்த தமிழ்மன்னர் மாவீரர் இராசராச சோழன். ஏற்றுமதி இறக்குமதித் தொடர்புகள் பலப்பல நூறு ஆண்டுகளுக்கும் முன்னதாகத் தமிழகத்துக்கும் சீனாவுக்கும் உண்டு. அதனால்தான் சீனப் பயணியும் புத்தத் துறவியுமான  யுவான் சுவாங் தமிழகத்தைக் காண வந்தார். அவர் வந்து சென்ற மிக முக்கியமான ஊர், பல்லவர் காலத் தலைநகரமான காஞ்சிபுரம். அந்த மாவட்டத்துக்குத்தான் இன்றைக்கு சீன அதிபர் அவர்கள் வருகிறார்கள்.
 

தமிழகத்தின் கலைநகரம் மாமல்லபுரம். கல்லில் கலைவண்ணம் கண்டு, கவிதைகளாகச் செதுக்கிய ஊர். பல்லவ நாட்டின் மிக முக்கியமான துறைமுகம் இருந்த கடற்கரை நகரம் அது. மாமல்லபுரத்தை உலகப் பண்பாட்டுச் சின்னமாகக் கருதி 'யுனெஸ்கோ' விருது தந்துள்ளது. இந்தியத் தொல்லியல் நகரங்களில் தலையாயது மாமல்லபுரம். சிற்பங்கள், மண்டபங்கள், தேர்கள், ரதங்கள், கட்டுமானக் கோவில்கள், கடற்கரைக் கோவில், புடைப்புச் சிற்பங்கள் என சிலை நகர் அது. அக்கலை நகருக்குத்தான் சீன அதிபர் அவர்கள் வருகிறார்கள்.
 

 DMK leader Stalin welcomes Chinese president


உலகம் உற்றுநோக்கி, பாடம் பெறத் தகுந்த ஒரு தேசத்தின் அதிபர், தமிழகம் வருவது தமிழர்கள் அனைவருக்கும் பெருமைதரத் தக்கது என்ற அடிப்படையிலும், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் அவரை , திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருக வருக என்று மனமார வரவேற்கின்றேன். சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களும் நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை தரத்தக்கது. இந்திய - சீன நல்லுறவுப் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தைத் தேர்வு செய்த மத்திய அரசுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

"தேசம் வேறு வேறு ஆனாலும், வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே" என்ற அடிப்படையில் அமையும் இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு தேசங்களுக்கு மட்டுமல்ல,  உலக சமுதாயத்துக்கும் ஒளிதருவதாய் அமையட்டும் என்றும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.