Skip to main content

கிராமத்திற்கே கழிவறை கட்டிக் கொடுத்த பள்ளி மாணவியை நேரில் பாராட்டிய கனிமொழி எம்.பி 

Published on 31/01/2021 | Edited on 31/01/2021

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஜெயலெட்சுமி. கடந்த ஆண்டு இணைய வழி போட்டித் தேர்வு மூலம் நாசாவுக்கு செல்ல தேர்வாகி இருந்தார். ஆனால் அமெரிக்கா செல்ல பணமில்லை. இதையறிந்த பலரும் ஏழை மாணவிக்கு  உதவிக்கரம் நீட்டினார்கள். அதேபோல 'கிராமாலயா' என்ற தொண்டு நிறுவனமும் மாணவிக்கு உதவிகள் செய்ய முன்வந்தபோது தனக்கு போதிய உதவிகள் கிடைத்துவிட்டதாக ஜெயலெட்சுமி சொல்ல, அப்படியானால் உங்கள் வீட்டில் கழிவறை இருக்கா? இல்லை என்றால் 'கிராமாலயா' கட்டித்தரும் என்றனர். இதைக் கேட்ட பள்ளி மாணவி ஜெயலெட்சுமி ''என் வீட்டில் மட்டுமல்ல எங்க ஊரிலேயே யார் வீட்டிலேயும் கழிவறை இல்லை. அதனால என்னைப் போன்ற பெண் குழந்தைகள் ரொம்பவே அவதிப்படுறோம். 2 கி.மீ தள்ளி இருக்கிற குளத்துக்கு போறதுக்கு டாஸ்மாக் கடைகளை கடந்து போகனும். இதுக்கு பயந்தே விடியறதுக்குள்ள போகனும். அப்பவும் அச்சமாக இருக்கும். விடிஞ்ச பிறகு வயசுப் பொண்ணுங்க வலியோட கஷ்டப்படுறாங்க அதனால எங்க ஊருல இருக்க எல்லாருக்கும் கழிவறை கட்டித் தருவீங்களா'' என்று கேட்டார்.

 

அசந்து போன 'கிராமாலயா' நிர்வாகிகள் உன் ஒருவருக்கு கிடைப்பதை ஊருக்கே பகிர்ந்து கொடுக்கும் பறந்த மனதை பாராட்டுகிறோம் என்று ஊருக்கே கழிவறைகள் கட்ட ஒத்துக் கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு வீடாக சென்று கழிவறைகளின் அசியம் குறித்து மாணவியும், கிராமாலயா நிர்வாகிகளும் எடுத்துக் கூறி 135 கழிவறைகளை கட்டியுள்ளனர். ஆனால் மாணவியின் கனவான நாசா போகும் திட்டம் கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டுவிட்டது.

 

கிராமத்து மாணவியின் இந்த கழிவறைத் திட்டம் குறித்து அறிந்து பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி எம்.பி. மாணவி ஜெயலெட்சுமி வீட்டிற்குச் சென்று பழங்கள், புத்தகங்கள், சால்வை வழங்கி பாராட்டியதுடன் உனக்கு எப்படி இந்த திட்டம் தோன்றியது என்றெல்லாம் கேட்டறிந்து மீண்டும் பாராட்டியதுடன் மாணவியின் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் உரையாடினார். தொடர்ந்து குடும்பத்தினருடன் இணைந்து மாணவி வீட்டு வாசலில் மரக்கன்று நட்டார்.

 

இந்த நிகழ்ச்சியின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து மாணவி ஜெயலெட்சுமி கூறும் போது, ''கனிமொழி எம்.பி திடீர்னு வீட்டுக்கு வந்தாங்க. 2 கலைஞர் புத்தகம், 2 அப்துல் கலாம் புத்தகங்கள் கொடுத்தாங்க. கழிவறை கட்டும் யோசனை எப்படி வந்ததுன்னு கேட்டுட்டு பாராட்டினாங்க. அவங்க வந்தது நினைவாக மரக்கன்று நட்டோம். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.