Skip to main content

25 ஆண்டுகளுக்குப்பின் மக்களவையில் நுழையும் திமுகவின் டி.எம்.செல்வகணபதி!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
DMK  DM Selvaganapathy enters Lok Sabha after 25 years

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, 70357வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மக்களவை கட்டடத்திற்குள் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி களம் இறங்கினார். அதிமுக சார்பில் தேர்தல் அரசியலுக்குப் புதுமுகமான விக்னேஷ், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் உட்பட இத்தொகுதியில்மொத்தம் 25 பேர் களம் இறங்கினர்.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (ஜூன்4) எண்ணப்பட்டன. இதற்காக, சேலம் கருப்பூர் அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்குஎண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு இருந்தது. சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனை போட்டி என்றாலும் கூட, திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவியது. மொத்தம் 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஒருசில சுற்றுகள் தவிர, ஏனைய சுற்றுகளில் டி.எம்.செல்வகணபதி தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். இந்தத் தேர்தலில் டி.எம்.செல்வகணபதி 5,66,085 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் விக்னேஷ் 4,95,728 வாக்குகள் பெற்றார். இதன்படி, டி.எம்.செல்வகணபதி 70357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாஜக கூட்டணியில் களம் கண்ட பாமக வேட்பாளர் அண்ணாதுரை 1,27,139 வாக்குகளும், நாதக வேட்பாளர் மருத்துவர் மனோஜ்குமார் 76,207 வாக்குகளும் பெற்றனர். இதற்கு அடுத்து, அதிகபட்சமாக நோட்டா சின்னத்தில் 14,894 வாக்குகள் பதிவாகி இருந்தன.எம்.பி. ஆக வாகை சூடிய திமுகவின் டி.எம்.செல்வகணபதிக்கு, சேலம் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி வெற்றிச் சான்றிதழை வழங்கினார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ சேலம் கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து கூறினர். திமுகவெற்றி பெற்றதை அடுத்து கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

வெற்றி வாகை சூடிய டி.எம்.செல்வகணபதி, கடைசியாக 1999 ஆம் ஆண்டு, சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 - 1996 அதிமுக ஆட்சியில் டி.எம்.செல்வகணபதி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே, 2006இல் திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, அவர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர், ஊழல் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கான தேர்தல் களம் பிரகாசமானது. அதன்படி, 25 ஆண்டுகள் கழித்து, திமுக சார்பில் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கிய டி.எம்.செல்வகணபதி, எம்.பி. ஆக வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், கால் நூற்றாண்டுக்குப் பிறகு அவர் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் காலடி வைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இடையில், திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி. ஆக பதவி வகித்து இருந்தாலும், நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக மக்களவைக்குள் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியால் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்