Skip to main content

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் - தேமுதிக அறிவிப்பு!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

lக

 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அதன்படி புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி 90 சதவீத வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்னரே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுவை வாங்கி வருகிறார்கள். சில கட்சிகளில் விருப்பமனு பெறும் தேதியே நிறைவடைந்துள்ளது. வேட்பாளர் அறிவிப்பு மட்டுமே பாக்கி என்ற நிலையில் திமுக  உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த் உடல்நிலை திடீர் பின்னடைவு - மருத்துவமனை அறிக்கை

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

vijayakanth health update

 

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கடந்த நவம்பர் 18 ஆம் தேதி காய்ச்சல் காரணமாகச் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது என மறுத்த மருத்துவமனை நிர்வாகம் அவரின் உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ளது.

 

மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனையால் வெளியிட்ட அறிக்கையில், 'காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைத்து வருகிறார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவரின் அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்புக்குப் பிறகு விஜயகாந்த் வீடு திரும்புவார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நலம் குறித்து மியாட் மருத்துவமனை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “விஜயகாந்த்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது. 

 

 

Next Story

ஈ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்ஸை சந்தித்த தே.மு.தி.க. நிர்வாகிகள்! 

Published on 07/03/2021 | Edited on 08/03/2021

 

dmdk leaders meet admk leaders at chennai

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

 

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தலைமை தொடர்ந்து வருகிறது. இதில் தே.மு.தி.க. கட்சியுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இழுபறி நீடிக்கிறது. 

 

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை தே.மு.தி.க.வின் எல்.கே.சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். 

 

இந்தச் சந்திப்பின்போது தே.மு.தி.க. நிர்வாகிகள், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதில் தொகுதிப் பங்கீடு இறுதியானதாகவும் தகவல்கள் கூறுகின்றன.