District Collectors Conference 5 important announcements made by the CM

Advertisment

சென்னைதலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிலையில் இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார். அதில், “முதலாவதாக, அரசுப் பள்ளி மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தற்போது மாணவர் ஒருவருக்கு மாதந்தோறும் உணவுக்காக வழங்கப்பட்டு வரும் தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஆயிரத்து நானூறாக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல், அரசுக் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயிலுவோருக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூபாய் ஆயிரத்து நூறு என்பது இனி ஆயிரத்து ஐந்நூறு ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 1 லட்சத்து 71 ஆயிரத்து 844 மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு 68 கோடியே 77 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதனைக் கல்விக்காகச் செய்யும் ஒரு முதலீடு என்று கருதியே இந்த அரசு இதனை மேற்கொள்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரண்டாவதாக, காவல்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளின்படி, கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு, மறுவாழ்வு பெறுவோர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 50 ஆயிரமாக வழங்கப்படும். மூன்றாவதாக, விசாரணைக் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், அதனைக் களைய உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று வீடியோ கான்பரன்சிங் முறையினைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisment

District Collectors Conference 5 important announcements made by the CM

நான்காவதாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளைப் பழுது நீக்கம் செய்து சீரமைக்கச் சிறப்புத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும். ஐந்தாவதாக, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தத்தேவையான அனுமதிகளை வழங்க தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு வழிகாட்டுக் குழு அமைக்கப்படும்” எனத்தெரிவித்தார். இம்மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசுத் துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.