/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_573.jpg)
பரபரப்பான டைரக்டர் பாலாவின் இயக்கத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்தது நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் மாறுபட்ட கேரக்டரில் நடித்த ‘அவன் இவன்’ என்கிற திரைப்படம்.
அந்தப் படத்தில் நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள சிங்கம்பட்டி ஜமீன், காரையார் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதி ராஜாவின் மகன் சங்கர் ஆத்மஜன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை அம்பை ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்ற வளாகத்திலுள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கு தொடர்பானவிசாரணையின் பொருட்டு இயக்குனர் பாலாவிற்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. அது தொடர்பாக நேற்று அம்பை நீதிமன்றத்த்தில் டைரக்டர் பாலா ஆஜரானார். அதுசமயம் மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் நடத்திய விசாரணையின்போது படத்தில் வரும் கதாபாத்திரமும், கதையும் கற்பனையே என்றும் இந்த வழக்குத் தொடர்வதின் மூலம் பணம் ஆதாயம் பெறுவதற்காகவே புனையப்பட்ட வழக்கு என்று டைரக்டர் பாலா தரப்பில் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் பிப்.8ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுசமயம் மீண்டும் டைரக்டர் பாலா ஆஜராகும்படி உத்தரவிட்டார். இந்த வழக்கின் பொருட்டு டைரக்டர் பாலா சார்பில் வழக்கறிஞர்கள் முகம்மது உசேன் மற்றும் நயினார் முகம்மதுவும், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் ஆஜராயினர். நடிகர் ஆர்யா இவ்வழக்கின் விசாரணையிலிருந்து விலக்குப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)