Skip to main content

தீவிர தோனி ரசிகர் மரணம்!

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Die hard Dhoni fan lost his lives in cuddalore

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி விஜயா தம்பதியின் மகன் கோபிகிருஷ்ணன்(34). இவருக்கு அன்பரசி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ள கோபிகிருஷ்ணன் தீவிர தோனி ரசிகர். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்று அங்கு ஆன்லைன் தொழில் செய்து வந்துள்ளார். 

அங்கு சென்று தொழில் செய்தாலும் அவர் விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் துபாயில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும், துபாயில் நடைபெறும் மேட்ச்களில் தோனி விளையாடும் அனைத்து மேட்ச்களையும் தவறாமல் பார்த்துவிடுவது வழக்கம். மேலும், இவர் தனது வீட்டை முழுவதும் மஞ்சள் நிறத்தில வண்ணம் பூசி வீட்டின் முன்புறம் தோனி படமும் பக்கவாட்டில் சென்னை சூப்பர்கிங்ஸின் சிங்கப் படத்தையும் சுமார் ஒன்னறை லட்சம் செலவு செய்து வரைந்து வீட்டின் முகப்பில் ஹோம் ஆஃப் தோனி ஃபேன் என எழுதி பிரபலமடைந்தார். 

Die hard Dhoni fan lost his lives in cuddalore

இந்த நிலையில்,  அதிக வட்டி தருவதாக கூறிய ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கோபிகிருஷ்ணன் தன்னுடைய பணத்தை முதலீடு செய்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், அவர் வசித்த வந்த கிராமத்தினர் சிலரையும் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறியதால் அதை நம்பிய கிராம மக்கள் சிலர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அந்த நிதி நிறுவனம் கிராம மக்களின் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், கோபி கிருஷ்ணனிடம் முறையிட்டுள்ளனர். இதில், கோபிகிருஷ்ணன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (17-01-24) காணும் பொங்கலை முன்னிட்டு கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற கோபிகிருஷ்ணனனை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பணம் கேட்டு தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் இன்று (18-01-24) அதிகாலை 4 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த கோபிகிருஷ்ணனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்து பலரது கவனத்தை ஈர்த்த கோபிகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'ஒரு மாதத்திற்குள் பிரச்சினைகளைக் தீர்க்க வேண்டும்'- ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கம் கோரிக்கை

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
'Problems should be resolved within a month'- Retired Fair Price Shop Workers Association demands

சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில அமைப்பு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தில் மாநில அமைப்பாளர் துரை. சேகர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தங்கராசு அனைவரையும் வரவேற்றார்.  

இதில் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார்.  தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.ஜெயச்சந்திர ராஜா, மாநில இணை பொதுச் செயலாளர் சிவக்குமார், சுவாமிநாதன், விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.  ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இதனைத் தொடர்ந்து சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்படும் லாப நட்ட கணக்குகளை வைத்துக்கொண்டு கூட்டுறவும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணப்பயன்களை தடுப்பது கண்டிக்கத்தக்கது.  கூட்டுறவுத்துறை நியாய விலை கடை பணியாளர் ஓய்வுக் கால சலுகைகள் குறித்து கூட்டுறவுத் துறை ஆய்வு செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்த பலனும் ஊழியர்களுக்கு ஏற்படவில்லை.  ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பண பலன்கள் அவர்களுக்கு சென்றடையாவிட்டால் தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற நியாய விலை கடை பணியாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குள் கூட்டுறவுத் துறையில் ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் பிரச்சினைகளை கூட்டுறவுத்துறை தீர்க்க வேண்டும் இல்லையென்றால் செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் இது குறித்து போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்'' எனக் கூறினார்.

Next Story

கடல் அலையில் சிக்கி ஐடி ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
2 Chennai IT employees lose their live in Parangipet sea wave


சிதம்பரம், பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் கூடுவாஞ்சேரியில் உள்ள ஜோ.கோ கார்ப்பரேசன் ஐடி கம்பெனியில் பணிபுரியும் கணினி பொறியாளர்கள் ஷாம் சுந்தர் (26) கோகுல் பிரசாத் (26) பொள்ளாச்சியைச் சேர்ந்த இவர்கள் கூடுவாஞ்சேரியில் தங்கி பணி செய்து வருகிறார்கள்.  

இவர்களுடன் 2 ஆண் மற்றும் 2  பெண் நண்பர்கள் என மொத்தம் 6 பேர் பாண்டிச்சேரியில் இருந்து கார் மூலம் பிச்சாவரம் சுற்றுலா தளத்திற்கு சென்று படகு சவாரி செய்துவிட்டு பின்னர் சாமியார் பேட்டை கடற்கரைக்கு குளிக்க வந்துள்ளனர்.அப்போது ஷாம் சுந்தர் மற்றும் கோகுல பிரசாத் ஆகியோர் கடல் அலையில் சிக்கி அடித்து சென்றுள்ளனர். இதனைப் பார்த்தவர்கள் அவர்களை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.